blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 5, 2014

ஜனவரி – மார்ச் மாத காலத்தில் கடன்பத்திரங்களில், அன்னிய முதலீடு வரலாறு காணாத அளவிற்கு உயர்வு


அதிக ஆதாயம் கிடைப்பதாலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வாலும் ஜனவரி – மார்ச் மாத காலத்தில் கடன்பத்திரங்களில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு வரலாறு காணாத அளவிற்கு ரூ.35,000 கோடியாக (575 கோடி டாலர்) உயர்ந்துள்ளது. ‘செபி’ வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.
அதிக ஆதாயம்
வளர்ச்சி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கடன்பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது. மத்திய அரசின் கடன்பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு கிடைக்கும் ஆதாயம் (ஈல்டு) ஜனவரி மாத தொடக்கத்தில் 8.80 சதவீதமாக இருந்தது. இது, மார்ச் மாத இறுதியில் 8.97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2013 ஆகஸ்டு மாதத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 68.85–ஆக வீழ்ச்சி அடைந்தது. இந்த
சரிவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் பிறகு ரூபாய் வெளிமதிப்பு 13 சதவீதம் உயர்ந்து தற்போது 60–ஆக உள்ளது.
ரூபாய் வெளிமதிப்பு
நடப்பு ஆண்டில் இதுவரை ரூபாய் வெளிமதிப்பு 2.7 சதவீதம் அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் செலாவணி மதிப்பில் அதிக வளர்ச்சி கண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ரூபாய் மதிப்பு அதிகரிப்பதால் கடன்பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைக்கும்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ரூபாய் மதிப்பு உயர்வதால் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் குறையும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசின் மானியச் சுமை குறைந்து நிதிப் பற்றாக்குறையும் குறையும். உரம், சமையல் எண்ணெய், பருப்பு, நிலக்கரி போன்றவற்றின் இறக்குமதி செலவினம் குறைந்து பணவீக்கமும் குறையும். பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு 4.68 சதவீதமாகவும், சில்லறை விலை பணவீக்கம் 25 மாதங்களில் இல்லாத அளவிற்கு 8.10 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டதால் 2012–13–ஆம் நிதி ஆண்டில் அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமான நடப்பு கணக்கு பற்றாக்குறை எப்போதும் இல்லாத அளவிற்கு 8,820 கோடி டாலராக உயர்ந்தது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாகும்.
எனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. 2013–14–ஆம் நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல் – டிசம்பர்) நடப்பு கணக்கு பற்றாக்குறை 55 சதவீதம் குறைந்து 3,110 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் 6,980 கோடி டாலராக இருந்தது.
எனவே, 2013–14–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 3,500 கோடி டாலராக குறைந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவாகும்.
பங்கு முதலீடு
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்திய பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று அன்னிய நிதி நிறுவனங்கள் கருதுகின்றன. கடன்பத்திரங்களில் மட்டுமின்றி பங்குகளிலும் இந்நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக 2013–14–ஆம் நிதி ஆண்டில் இந்திய நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் அதிக முதலீடுகளை மேற்கொண்டன. அந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நிகர முதலீடு ரூ.79,700 கோடியாக உள்ளது.
இந்தியா முன்னிலை
கடந்த ஒரு மாத காலத்தில் பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டை பெருமளவு ஈர்த்துள்ளதில் சீனா, கொரியா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளை விஞ்சி இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்திய பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளதால் கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று மிர்ரே அசெட் குளோபல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி கோபால் அகர்வால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►