blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, May 5, 2014

பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையில் நோய்கள் பெருகுகின்றன - ஆய்வு

ஆப்ரிக்க யானைகள்--- பெரிய விலங்குகள் குறைந்தால் மனிதர்களுக்கு நோய்கள் ?
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.

யானைகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்ற பெரிய விலங்கினங்களின் எண்ணிக்கை குறைவதால் உயிரினக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் இந்த போக்குக்கு காரணமாக இருக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.

கென்யாவில் வேலி போட்டு பெரிய விலங்குகள் வருவது தடுக்கப்பட்டுள்ள வனப்பகுதிகளுக்கு சென்று ஸ்மித்ஸோனியன் மையத்தின் ஆராய்ச்சியாளர் குழு ஒன்று ஆராய்ந்தபோது, அங்கே பெரிய விலங்குகள் இல்லாத இடங்களில், எலிகள், ஈக்கள் போன்ற நோய்ப் பரப்பும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளனர்.

பெரிய வனவிலங்குகள் இல்லாதிருப்பதற்கும், பார்டொனெல்லா போன்ற தொற்று நோய்க்கிருமிகள் பரவுவதற்கு காரணமான காட்டு எலிகளின் எண்ணிக்கை பெருக்கத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தற்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வு காட்டுகிறது.

பார்டொனெல்லா ஈக்களின் மூலமாக மனிதர்களிடத்தே பரவும்போது, உடலுறுப்பு செயலிழப்பு, ஞாபக சக்தி இழப்பு ஏன் உயிரிழப்பே கூட ஏற்படுகிறது.

பெரிய விலங்குகளால் சுற்றாடலில் பெரிய தாக்கம் இருக்கும் என்பதால்தான் அவை இல்லாதபோது எலிகளும் ஈக்களும் பெருகிவிடுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவ்விலங்குகள் பெருமளவான செடிகொடிகளை உண்கின்றன, பூமியில் தமது பெரும் பாதங்களை பதித்து நடக்கின்றன. இவற்றால் நிறைய பூச்சிகள் அழிவதுண்டு.

ஆனால் பெரிய விலங்குகள் இல்லாமல்போனால், அது நோய்ப்பரப்பும் எலிகள் மற்றும் பூச்சிகளின் பெருக்கத்துக்கு வசதியாகப் போய்விடுகிறது. வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதாக இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது என ஸ்மித்ஸோனியன் ஆய்வறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவரான டாக்டர் ஹில்லரி யங் கூறினார்.

"பெரிய வன விலங்குகள் அழிவதென்பது மனிதர்கள் நம்முடைய அன்றாட வாழ்விலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நம்முடைய உடல்நலம் போன்ற விஷயங்களிலும் அதன் தாக்கம் இருக்கவே செய்கிறது. இந்த தொடர்பெல்லாம் மேலோட்டமாகப் பார்ப்பதால் தெரியாது, ஆனாலும் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது."

மனிதர்களுக்கு வருகின்ற தொற்று வியாதிகளில் அறுபது சதவீதமானவை விலங்குகளிடத்திலிருந்து மனிதர்களுக்கு பரவுகின்ற வகையிலான நோய்கள்தான்.

மாறிவரும் உலகின் பருவநிலை இந்த அதிகரிப்புக்கு ஒரு காரணம் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தனர். பெரிய விலங்குகளின் இழப்பும் ஒரு காரணம் என்று இந்த ஆய்வு காட்டுகிறது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►