வட மாகாணத்தில் வறட்சியினால்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் வறட்சி நிவாரணம்
போன்றவற்றை வழங்காமல் ஒரு நெருக்கடி நிலைலைய அங்கு அரசாங்கம்
ஏற்படுத்தியிருப்பதாக வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன் குற்றம்
சுமத்தியுள்ளார்.இந்த வறட்சி வருங்காலங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் பயிரினங்களை அடையாளம் கண்டு பயிரிடுவதற்கான விழிப்புணர்வை தமது அமைச்சு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தி வருவதாகவும் வடக்கு விவசாயத்துறை அமைச்சர் கூறினார்.
வறட்சியினால் ஏற்படுகின்ற குடிநீர் கஸ்டத்தைப் போக்குவதற்காக மத்திய அரசு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக குடிநீர் விநியோகத்துக்கான நிதியொதுக்கீடு செய்து நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம் என்றபோதிலும் தீவகப் பகுதிகளுக்கு மட்டுமே தேவையான நிதி வழங்கப்பட்டிருப்பதாக ஐங்கரநேசன் தெரிவித்தார்.
எனினும் ஏனைய பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அந்த நிதி வழங்கப்படவில்லை என்றும் அது குறித்து வினவியபோது, அதற்குரிய கோரிக்கைகளை அனுப்பி வைப்பதில் எற்பட்ட தாமதம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தன்னிடம் கூறியிருப்பதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், வறட்சியினால் ஏற்பட்டுள்ள பயிரழிவுகளுக்குரிய நட்டஈடும் வறட்சி நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கைகளுக்கும் உரிய பதில் கிடைக்கவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் ஐங்கரநேசன், போதிய நிதிவளம் வழங்கப்படாத காரணத்தினால் மாகாண சபையினாலும், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply