blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, April 3, 2014

2 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை : சிலியில் பயங்கர நிலநடுக்கம்


சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து 2 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்து கடற்கரை பகுதிகளை தாக்கியது.சிலியில் கடற்கரைப் பகுதியில், அந்நாட்டு நேரப்படி இரவு 8.45 மணி (இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5.15 மணி) அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவையில் இது 8.2 ஆக பதிவாகி இருந்தது. கனிமச் சுரங்கங்கள் நிறைந்த இகுகியூ பகுதியின் வடமேற்கில் 86 கி.மீ. தொலைவில் கடலில் 20.1 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்துக்கு பின்னர் சுமார் 17 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.

இப்பகுதியில் இருந்த
பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியும், திடீர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக மாரடைப்பு வந்தும் 6 பேர் இறந்ததாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து வடமேற்கு பகுதியில் 2 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் ஏற்பட்டு, கடற்கரைப் பகுதியில் இருந்த வீடுகளை எல்லாம் துவம்சம் செய்தன.
நிலநடுக்கத்தினால் மின்சாரம், தொலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அரிகா நகரில் டிரான்ஸ்பார்மர்கள், தெரு விளக்குகள் அனைத்தும் வெடிச் சிதறியதால், நகரமே இருளில் மூழ்கியது.

வீடுகள் பெரும் ஆட்டம் கண்டதால், பொதுமக்கள் வீதிகளுக்கு ஓடி வந்தனர். அவர்கள் வெட்ட வெளிகளுக்கு ஓடினர். கடற்கரை அருகில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, 9 லட்சம் பேர் ஆங்காங்கே உள்ள மைதானங்களுக்கும், மேடான இடங்களுக்கும் சென்றுள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து வட பகுதியை, பேரிடர் பாதிப்பு இடமாக அதிபர் மிசெலி பாசெலட் அறிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேற்று சுற்றிப் பார்த்தார். சிலியில் கடந்த 2010ல் 8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் நாசம் ஏற்பட்டது. இதில் 526 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►