blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, December 6, 2015

தனது வாளாலேயே வீழ்த்தப்படும் மோடி

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
2014ஆம் ஆண்டின் தொடக்கத்துக்கு ஒருமுறை முன்சென்று, இந்தியாவின் அரசியலை அவதானிக்கலாம்.
ஆளுங்கட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, ஏப்ரல் 7 முதல் மே 12ஆம் திகதி நடைபெறவிருக்கும் இந்தியாவின் 16ஆவது மக்களவைக்கான தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. ஆனால், காங்கிரஸைப் பற்றிய கவனங்களின்றி, ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்திருந்தவர் ஒருவர் தான், அவர் தான் குஜராத்தின் முதல்வர் நரேந்திர மோடி.

பாரதிய ஜனதாக் கட்சியின் (பி.ஜே.பி) தலைமை வேட்பாளரான மோடி,நாடு முழுவதும் பயணம் செய்து, பிரசாரங்களை மேற்கொள்கிறார். போதாதென்று, ஹோலாகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் பல இடங்களில் உரையாற்றுகிறார். டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்களில், எங்கு பார்த்தாலும் மோடி, மோடி, மோடி என்ற குரல். மோடி அலை வீசியது. 16ஆம் திகதி முடிவுகள் வெளியாகிய போது, தனித்துப் பெரும்பான்மையைப் பெற்ற பி.ஜே.பி, ஆட்சியமைத்ததோடு, பிரதமராகப் பதவியேற்றார் மோடி. இவ்வாறு தான், இறுதி 30 வருட இந்திய வரலாற்றில் பெறப்பட்ட மிகப்பெரிய நாடாளுமன்றப் பெரும்பான்மை பெறப்பட்டது.

குஜராத்தில் முதல்வராக இருந்து, நரேந்திர மோடி மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகள், தேசத்தைக் கட்டியெழுப்பக்கூடிய ஒருவராக மோடிக்கான விம்பத்தை வழங்கிய போதிலும், மோடியின் மிகப்பெரிய பலமாக, அவரது ஆதரவாளர்களும் எதிர்க்கட்சியினரும் அரசியல் ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டது ஒன்று தான் - அவர், மிகச்சிறந்த தொடர்பாடல் கலைஞன். பொதுமக்கள் தொடர்பை மிகவும் முக்கியமானதாகக் கருதி, அவர் மேற்கொண்ட பிரசார நடவடிக்கைகள், அவரது வெற்றிக்கான மிக முக்கிய பங்கை ஆற்றியிருந்தன.

பாரதிய ஜனதாக் கட்சி எனப்படும் இந்துத்துவா, பாரம்பரிய அடையாளங்களைக் கொண்ட கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளருக்காகப் போட்டியிட்ட மோடி, நவீன விடயங்களைத் தனது பிரசாரத்தில் கொண்டு வந்திருந்தார். உலக வரலாற்றிலேயே, சமூக ஊடக இணையத்தளங்களை உச்சளவில் பயன்படுத்தி, அதன்மூலமாக அதிகளவு வாக்குகளைப் பெற்றவராக மோடியே இருப்பார். தேர்தல் பிரசாரங்களில், இந்துத்வா கொள்கைகளை முன்னிலைப்படுத்தாமல், இந்தியாவின் முக்கியமான பிரச்சினைகளின் ஒன்றான, மலசலகூடங்கள் பற்றிக் கதைத்தார். கோவில்களை விட மலசலகூடங்களை முன்னிலைப்படுத்தினார். 'ஒவ்வொரு வீட்டுக்கும் மலசலகூடத்தை அமைத்துத் தருவேன்' என்றார். புராண இதிகாசங்களை விட்டுவிட்டு, எதிர்காலம் பற்றிக் கதைத்தார். அவரது வெற்றியைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த விமர்சகர்கள், 'நாளைக்கான வாக்குறுதியை வைத்தே அவர் வென்றார், வாசனைப்படுத்தப்பட்ட நேற்றைய தினத்தை வைத்தல்ல' என்று கூறினர். அது, மிகவும் உண்மையானது.

அத்தோடு, 2002ஆம் ஆண்டு குஜாராத் கலவரங்கள், மோடி மீதான பிரதானமான கறையாக இருந்தன. அந்தச் சம்பவத்தில், மோடிக்குச் சம்பந்தம் கிடையாது என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும், மோடியின் எதிரணிகள், குஜராத் கலவரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்தத் தவறயிருக்கவில்லை. அந்த மோசமான விம்பத்திலிருந்தும், சிறப்பான தொடர்பாடல் திறன்கள் காரணமாக விடுபட்டிருந்தார் மோடி.

ஆனால், மே 2014ஆம் ஆண்டிலிருந்து ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், நரேந்திர மோடி அரசாங்கத்துக்கெதிரான குரல்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, மத சகிப்புத்தன்மை தொடர்பாகக் குரல்கள், அவ்வரசாங்கத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குமளவுக்குக் காணப்படுகின்றன.

இந்தியாவின் தாத்ரியில், மாட்டிறைச்சி உண்டதாகப் பரப்பப்பட்ட வதந்தியைத் தொடர்ந்து முஸ்லிமொருவர் இந்து அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மோடி அரசாங்கத்துக்கெதிரான உச்சக்கட்ட பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மோடி தலைமையிலான பி.ஜே.பி ஆட்சியில், இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற நிலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கு பி.ஜே.பி பங்களிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கலைஞர்கள் பலர், தங்களது விருதுகளைத் திரும்ப வழங்கியிருக்கிறார்கள், இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆமிர் கான், இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற நிலை அதிகரித்துள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறுவோமா என தனது மனைவி கேட்டதாகவும் அண்மையில் தெரிவித்தமை, இந்த எதிர்ப்புகளில் உச்சநிலையாக அமைந்தது.

நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ், சகிப்புத்தன்மையற்ற செயற்பாடுகள் இந்தியாவில் அதிகரிப்பது போன்றதொரு விம்பம் இருந்தாலும் கூட, இந்தியாவின் உள்துறை அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், சகிப்புத்தன்மையற்ற வன்முறைச் செயற்பாடுகள், இவ்வாண்டில் அதிகரித்தமைக்கான எந்தவோர் ஆதாரமும் காணப்படவில்லை. கடந்த சில வருடங்களோடு ஒப்பிடும் போது, அதே மட்டத்திலேயோ அல்லது அதை விடக் குறைந்த நிலையிலேயோ தான், சமுதாயங்களுக்கிடையிலான வன்முறைகள் காணப்படுகின்றன. ஆகவே, எங்கிருந்து இந்த 'இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடாகிவிட்டது' என்ற விம்பம் உருவாகிறது?

அதை அறிவதற்கு, இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட தொடர்பாடல் திறனைப் பற்றிய கவனத்தை மீண்டும் செலுத்துதல் அவசியமானது.

2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறுவதற்கு, ஊடகங்களை எவ்வாறு சிறப்பாகக் கையாண்டு, தன் மீதான சிறப்பான அபிமானத்தை மோடி ஏற்படுத்தினாரோ, தற்போது அதே ஊடகங்களே அவருக்கெதிரானவையாக மாறியிருக்கின்றன.

இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள் எப்போதுமே, மேட்டுக்குடி மக்களையே பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருக்கின்றன. மேட்டுக்குடி மக்களுக்கு, காங்கிரஸ் கட்சி மீதான அபிமானம், எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. ஆகவே, மோடி தலைமையிலான அரசாங்கம், ஊடகங்களைக் கையாள்வதில் தனது கவனத்தைக் குறைக்க, அவ்வூடகங்கள், மோடி அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் உதாரணமாக, தாத்ரி சம்பவம் எவ்வளவு மோசமானதோ, அதே போல், அச்சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களில், பசு வதைக்கெதிரான செயற்பாட்டாளரொருவர் கர்நாடகாவில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். ஆனால், இச்சம்பவம் தொடர்பாக, தேசிய ஊடகங்களில் ஆரம்பத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதோடு, சமூக ஊடகங்களில் அதிகரித்த எதிர்ப்புக் காரணமாக, சிறிய செய்தியாக மாத்திரம் பிரசுரித்திருந்தார்கள். இந்த இரண்டு சம்பவங்களுமே, சகிப்புத்தன்மையற்ற தன்மையில் வெளிப்பாடுகள் தான். ஆனால், முஸ்லிமொருவர் இந்துக்களால் கொல்லப்பட்டதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய ஊடகங்கள், மற்றைய கொலை, தங்களது 'சகிப்புத்தன்மையற்ற இந்தியா' என்ற பிரசாரத்துக்கு எதிரானது என்பதால், தவிர்த்திருந்தார்கள்.

தவிர, தலித் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், பொலிஸாரால் நிர்வாணமாக்கப்பட்டனர் என்ற செய்தி வெளியாக, அதுவும் தீயாகப் பரவியது. ஆனால், பின்னர் வெளியான காணொளிகளைத் தொடர்ந்து, பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அக்குடும்பத்தினரே ஆடைகளைக் களைந்து எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு பல சம்பவங்கள், மோடி அரசாங்கத்துக்கு எதிரானவையாக மாற்றப்பட்டிருந்தன. ஆனால், அவற்றைச் சரியாக எதிர்கொள்வதற்கு, மோடியின் அரசாங்கம் தவறியிருந்தது.

ஆமிர் கானின் கருத்தும் கூட, ஆச்சரியத்துக்குரியதல்ல. நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துக்களை அவர், தொடர்ச்சியாக வெளியிட்டே வந்திருந்தார். 2005ஆம் ஆண்டு, அமெரிக்காவுக்குச் செல்வதற்கு மோடிக்கு விசா வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட 203 பிரபலங்களில், ஆமிர் கானும் ஒருவர். தொடர்ச்சியான காலங்களிலும் அவர், மோடிக்கெதிரான கருத்துக்களை வெளிப்படுத்தியே வந்திருக்கிறாhர். இந்த விருதுகளைத் திருப்ப வழங்கும் போது கூட, அவற்றின் ஆரம்பகட்ட கர்த்தாக்களில் ஒருவரான நயன்தாரா சாஹல், ஜவஹர்லால் நேருவின் சகோதரியின் மகள். எனவே, காங்கிரஸ் கட்சியோடு தொடர்புடையவர் அவர். இந்தியாவின் சமுதாயங்களுக்கிடையிலான வன்முறைகள், கடந்த காலங்களை விட அதிகரித்திருக்கவில்லையெனில், கடந்த காலங்களிலும் இவ்வாறு அதிகளவிலான எதிர்ப்புகளும் விருதுகளைத் திருப்பி வழங்கும் சம்பவங்களும் இடம்பெற்றனவா என்றால், இல்லை. அவ்வாறாயின் ஏனென்ற கேள்விகள், போதுமானவரையில் எழுப்பப்படுவதில்லை.

மோடியோ, வெளிநாடுகளுடனான உறவுகளைப் புதுப்பிப்பதிலும் மேம்படுத்துவதிலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் தனது கவனத்தைச் செலுத்திவரும் நிலையில், மோடிக்கு அடுத்த நிலையில் இருந்து, இந்தப் பிரசார நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கு, பி.ஜே.பி சார்பில் பொருத்தமான எவரும் இல்லையென்பது தான் பிரச்சினை.

இந்தியாவில் சகிப்புத்தன்மையற்ற பிரச்சினையே இல்லையென்று கூறிவிட முடியாது. காலங்காலமாக, சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள், இந்தியாவில் இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றுக்கெதிரான எதிர்ப்பென்று தவறாகிவிடாது. அதேபோல், ஆளும் பி.ஜே.பி, இந்துத்துவா அடையாளத்தைக் கொண்ட கட்சி தான். அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர்,;லது பொருத்தமற்ற அல்லது இனஃமதஃசாதி சம்பந்தமான அடிப்படைவாதக் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டிருக்கிறார்களென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவற்றை எதிர்ப்பதில் காணப்படும் அரசியலையும் அதன் பின்புலத்தையும் மக்களுக்கு விளங்க வைப்பதில், மோடி தலைமையிலான அரசாங்கம், தவறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த ஆட்சியைக் கைப்பற்ற, பொதுமக்கள் தொடர்பாடலைச் சிறப்பாகக் கையாண்ட மோடி, ஆட்சிக்கு வந்த பின், அதே தொடர்பாடல் முறைகளால் சிக்கலுக்குள் தள்ளப்படுகிறார் என்பது தான் இதில் கவனிக்கப்பட வேண்டியது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►