ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ
அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த
கவிமழை! காமராசர் அரங்கம்> தேனாம்பேட்டை, சென்னை-18. (26.10.2015)
அருளும் அன்பும்
அளவற்றருளும் அவனின் ;
கருணை மழையில் நனைந்து ,
உருளும் உலகை
இருளும் ஒளியுமாய்
அமைத்த அவனைப் புகழ்ந்து ,
பொருளும் , அறிவும்
பொதிந்த குர்ஆன் கொணர்ந்த
நபியை நினைந்து ,
அருள்வாய் கவிதை
நிறைவாய் என்று
அல்லாஹ் கருணை இறைஞ்சி ,
கவித்தேன் பருக
காத்திருக்கும் அவையை
விளித்தேன் – இதோ
கவிழ்த்தேன் என்
கவிதைக் குடத்தை – இன்றிங்கு என்
அகத்தேன் அனைத்தயும்
அவிழ்த்தேன்
அரசருக்கரசன் அவனாவான்
கவி
அரசருக்கரசன் இவராவார் !
ரஹுமான் அவனின்
அடியான் இவனின்
( அப்துல் ரகுமான் )
குடியானவன் நான் – கவிதை
படியாதிருக்கலாமா ?
படியாது போய் இருக்கலாமா ( ஆசனத்தில் )
முடியாது !
முடியாளும் இவர் முன்னால்
கவிதை படியாது
நான் அமர முடியாது !!!
அமர்ந்தால் …….
என் பொழுது விடியாது !
எனவே – இக்
குடியானவன் மடியாலும் ஒரு கவிதை
கவி உலகின்
முடி ஆளும் மாமன்னனுக்கர்ப்பணம் .
மன்னா !
குடியானவன் நான் கேட்கிறேன் ,
இவ் அரங்கில்
உங்கள் கவிதையை
குடியாதவன் யார் ?
மேடையில் இருப்போர் எல்லோரும் மேதைகள்தான் ,
ஆனாலும்
இன்று இவ்வரங்கில் அமர்ந்துள்லோர் எல்லோரும்
உங்கள் கவிதைப் போதை தலைகேறிய பேதைகள்தான் !
மன்னா !
குடியானவன் நான் கேட்கிறேன் ,
இவ் அரங்கில்
உங்கள் கவிதையை
குடியாதவன் யார் ?
சொல்லுங்கள் !
உங்களுள் – இவரின் கவித்தேன்
குடியாதவன் யார் ?
இவர்
மதுரை மஹியின்
உருதுக் கவிதையின்
உலக மொழி பெயர்ப்பு !
ஸெய்னத் பேகத்தின்
கருவில் வளர்ந்த
ஸெய்தூன் மரம் .
செய்யத் அஹமதின்
விந்து விழுந்து
வந்து எழுந்த சிந்து ஸம் ஸம் !
வைகைக் கரை தந்த
கவிதைப்
பொய்கை இது !
ஒருபோதும்
பொய் கை ஒழுகாத ( அல்லது எழுதாத )
பொய்கை இது !
இவர் அந்த –
தென்கரை தந்த தேன் சுறை !
வைகை மணலில் அன்று
வை – கை என்று
அட்சர சாஸ்திரம் ஆரம்பித்ததாலோ என்னமோ
வைகை வெள்ளமாய்
கரை உடைத்து பாய்கிறது கவிதை !
வற்றாத வைகக் கரையில்
ஒரு மொட்டாக வளர்ந்தவர் அல்லவா ,
எனவே எப்போதும்
வற்றாத கவிதை
ஊற்றாக இருக்கிறார் .
வாணியம்பாடி வானத்தில்
சிறகுவிரித்தது இந்த
புல் புல் !
புல் புல் தான் ஆனாலும் –
அனியாயக்கார்களுக்கு
இவர் அபாபீல் !
அதனால்தானே –
உமறுப்புலவர் விருது பெற்றவராய் ,
பொதிகை விருதால் போர்த்தப்பட்டவராய் ,
தமிழன்னை விருது எனும் தகமை அலங்க்கரித்தவராய் ,
அச்சர விருதுக்கு அழகு சேர்த்த கலை மாமணியாய் ,
கவியரசர் பாரிவிழா விருதை
குன்றக்குடி கையால் வென்று உயர்ந்தவராய் ,
சாஹித்ய எகடமி விருதை
வென்ற ஒரே தமிழ் சரித்திரமாய் ,
பாரதிதாசன் விருது , சிற்பி விருது என
பல விருதை வென்றிருந்தும்
ராணா இலக்கிய விருது தானாய் இவரை வந்தடைந்திருந்தும் ,
” வெற்றி பல கண்டு – நான்
விருதுபெற வரும்போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல் ரகுமானைத் தருக என்பேன் ” – என்று
கலைஞர் நாவாலும் –
தமிழ் நா ஆளும் , வாழும் – அம்
மாமனிதர் கையாளும்
கலைஞர் விருதை வென்ற தமிழ் பொக்கிசமாய் ,
சிங்களத்தீவினுக்கோர் பாலமமைத்து – அங்கும்
இந்துக் கடல் முத்தின்
தங்கக் கிரீடமென
கம்பர் விருதை வென்ற கம்ப காவலராய்
விளங்குகிறார் .
வில்லால் அல்லாது
சொல்லால் மல்லாடும்
கவிராத்திரி களத்திற்கு
தளபதியாய்
அல்லாஹ்வின் பெயர்தாங்கும் – இந்த
முல்லாவே இருந்துள்ளார் ..
இவர் ஒரு கட்டளைக் கலிப்பா தான்
ஆனால்
வாணியம்பாடியிலோ இவர்
கட்டளை இடும் கலீபா !
ரகு – மான் இல்லாமல்
ராமாயணம் இல்லை ,
ரகுமான் இல்லாமல்
கம்பன் அரங்க்கில்லை ” என்று
வாலி வாயால் வாழ்த்தப்பட்டவர்
ஆழி அளவு ஆழமானது
வாலி அவர் வார்த்தை .
வாழி – இவர் நீடூழி !
இவர் –
“பொய் மான் பின்னால்
போனவன் அல்ல – நான்
ஈமான் பின்னால் ஏகும்
ரகுமான் ” என்றவர்
அதனால் ,
எம் இதயத்தை வென்றவர். .
இந்த “முத்தமிழின் முகவரி ” யால் .
” சுட்டுவிரல் ” தொட்டெழுதும் பருவத்திலேயே
இவரின் ” பால் வீதியில் ”
” விதையாய் விழுந்தவர்கள் ” நாங்கள் –
இவரை ” ஆலாபனை ” செய்தே
” பித்த” னாய் போனவர்கள் பலர் ..
இவர் எங்களைப்போன்ற
” நேயர் விருப்பம் ” கருதி
” மின்மினிகளால் ஒரு கடிதம் ” எழுதியவர் ,
” அவளுக்கு நிலா என்று பெயர் ” சூட்டி
” கரைகளே நதியாவதில்லை ” என்று கிடந்த இந்த
” முட்டை வாசிகள் ”
” மரணம் முற்றுப்புள்ளி அல்ல ” என்பதை
தெரிந்துகொள்ள உதவியவர் இவர் .
” சொந்தச் சிறைகள் ” உடைக்கப்பட்டு
” விலங்குகள் இல்லாத கவிதை ” யாக
” புதுக்கவிதையில் குறியீடு ” சொல்லி
எங்களைத் தட்டிக்கொடுத்து தூக்கி நிறுத்தியவர் இவர் !
இவரின் ” பூப்படைந்த சபதம் ”
புத்தகத்தை விரித்தால் – அங்கு
“முத்தங்கள் ஓய்வதில்லை ” .
” சிலந்தியின் வீடு ” கூட உடையக்கூடாது என்று
” தொலைபேசிக் கண்ணீர் ” சிந்தி
” ரகசியப் பூ ” வழங்கும்
” நெருப்பை அணைக்கும் நெருப்பு ” இவர் .
” கடவுளின் முகவரி ” யோடு
” சோதி மிகு நவ கவிதை ” சுமந்து
” இல்லையிலும் இருக்கிறான் ” அவன்
” நிலவிலிருந்து வந்தவன் ”
” தட்டாதே திறந்திருக்கிறது ” என்று
” தேவகானம் ” ஏந்திவந்த
” பூக்காலம் ” இவருடையது .
” இது சிறகுகளின் நேரம் ” என
” பறவையின் பாதையில் ”
“காக்கைச் சோறு ” கொண்டு
” உறங்கும் அழகி “யை எழுப்பி
” பசி எந்தச் சாதி ” எனக்கேட்டு
” கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லை ” என்று
கல்வெட்டாய்க் கவிதைசெதுக்கிய
” பாலை நிலா ” இவர் .
” வருடங்கள் தவறாமல்
குழந்தைகள் தினத்தை
கொண்டாடுபவர்களே ,
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டுவிட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள் ”
என்று கேட்ட
இந்த
ஹைக்கூ வை
கஸலை
நஜுமை கொண்டாடுவோம் வாருங்கள் !
புதுமைகளை தமிழுக்குள்
புகுத்திய
பெருமகனுக்கு இறைவன் பேரருளை வேண்டுவோம் !
முத்தமிழின் முதுசத்தை ,
மொழி கடந்து – உலகின்
விழி திறந்து
வாசிக்க வைத்தவரை
நேசிப்போர் , அவர்தம் ஆயுளைநீடிக்க
அல்லாஹ்வை ஆசிப்போம்
வாருங்கள் . .
ஆமீன் , ஆமீன்
யாரப்பில் ஆலமீன்
கவித்தேன் பருக
காத்திருந்த அவையை
விளித்தேன் – இதோ
கவிழ்த்தேன் என்
கவிதைக் குடத்தை – இன்றிங்கு என்
அகத்தேன் அனைத்தயும்
அவிழ்த்தேன் .
முத்தமிழ் வாழ்கவென
முடித்தேன் !
அல்ஹம்துலில்லாஹ் !
No comments:
Post a Comment
Leave A Reply