பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
இன்று ஒரு வலையமைப்புக்குள் இணைத்து அன்றாடம் கருத்து பரிமாற்றங்கள், அரட்டைகள், பசுமையான நினைவுகளின் மீட்டல்கள் என அனைத்துக்கும் பேஸ்புக் அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது.
ஆனால் இவையெல்லாம் ஒரு பக்கமிருக்க சில கயவர்களின் போலி பேஸ்புக் கணக்கினால் ஏற்படும் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
அதுவும் பெண்களை இலக்காக கொண்டு போலி பேஸ்புக் கணக்குகளின் மூலம் பாலியல் தொந்தரவுகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பன அதிகரித்து வருகின்றமை பேஸ்புக் என்றாலே ஆபத்தானது என்ற சிவப்பு நிற சமிக்ஞையையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
அந்த வகையில் இவ்வாரம் குற்றம் பகுதியில் இடம்பெறுவது காலத்தின் தேவைக்கேற்ப தன்னுடைய ஆடைகளிலும் புதிய நவநாகரிக பரிமாணங்களை ஏற்படுத்த வேண்டுமென்று நினைத்த இளம் பெண் பிரியங்காவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போலி பேஸ்புக் கணக்கினால் ஏற்பட்ட பெரும் ஆபத்து தொடர்பான கதையாகும்.
பிரியங்கா பெயருக்கு ஏற்றாற் போல் வசீகரமானவள். குடும்பத்தில் இளையவளான இவளின் தாயும், தந்தையும் அரச ஊழியர்கள் என்பதால் காலையில் தொழிலுக்காக வெளியில் சென்றால் இரவு நேரத்தில் தான் வீட்டுக்கு வருவார்கள். பிரியங்காவுக்கென்று இருந்த ஒரே சகோதரியும் யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பட்டப்படிப்பினை தொடர்வதால் பிரியங்கா தன்னுடைய கண் தெரியாத பாட்டியுடனேயே பெரும்பாலான பொழுதை கழித்தாள்.
எனவே, கல்வி பொதுத்தராதர சாதாரணத் தர பரீட்சையை எழுதி விட்டு உயர்தரத்தை தொடரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரியங்கா இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் தையல் கலை டிப்ளோமா சான்றிதழைப் பெறுவதற்காக கிழமையில் இரண்டு நாட்கள் தையல் வகுப்புகளுக்கு சென்று வந்தாள். இயல்பாகவே கைப்பணிப் பொருட்கள் மற்றும் தையல் போன்றவற்றில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்த பிரியங்காவுக்கு இது மேலும் அவளுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கான சரியான சந்தர்ப்பமாகவிருந்தது. எனவே, தையல் வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்றதை தொடர்ந்து தனக்கு தேவையான ஆடைகளை புதிய நவநாகரிக வடிவங்களுடன் அவளே தைத்து தன் தோழிகளிடமும் அவற்றை காட்டப் பெருமைப்பட்டாள்.
தோழிகளுக்கும் அவள் தைத்த ஆடைகளில் காணப்பட்ட நேர்த்தியும், புதிய வடிவங்களும் மிகவும் பிடித்திருந்தது. எனவே பிரியங்காவின் உற்ற தோழியான நர்மதா ஒரு புதிய ஆடையொன்றினை பிரியங்காவிடம் கொடுத்து தைப்பதற்காக பிரியங்காவின் வீட்டுக்கு வருகின்றாள். வந்தவள் ஒரு ஆலோசனையொன்றினையும் முன் வைக்கின்றாள். “நான் இணையத்தில் பார்த்தேன். நாளுக்கு நாள் புதிய வடிவமைப்புகளுடனான ஆடைகளை பதிவிறக்கம் செய்கின்றார்கள்.
நீயும் அவற்றை பார்த்தால் உனக்கு இன்னும் புதிய முறையில் தைக்க உதவியாகவிருக்கும். எனவே முயற்சி செய்து பாரு”. என்று ஆலோசனை வழங்கினாள். அவளின் ஆலோசனையின் படி அன்று முதல் செயற்பட ஆரம்பித்த பிரியங்கா இணையத்தில் புதிய மொடலிங் பெண்களின் ஆடை வடிவமைப்புகளை பார்க்கத் தொடங்கினாள். அது மட்டுமின்றி, கையோடு பேஸ்புக் கணக்கு ஒன்றினையும் ஆரம்பித்தாள். அதில் தனக்கு தெரிந்த நண்பர்களை இணைத்துக்கொண்டவள், ஒரு நாள் கீர்த்தனா என்ற ஆடை தையல் கலை நிபுணர் ஒருவரின் பேஸ்புக் கணக்கினை பார்வையிடுகின்றாள்.
கீர்த்தனா மிக அழகானவள். மட்டுமின்றி அவளது பேஸ்புக் கணக்கில் மிக அழகிய ஆடை வடிவமைப்புகளையும் அவளால் காணக் கூடியதாகவிருந்தது. எனவே, அவளோடு பேஸ்புக் ஊடாக நட்பினைப் பேணினால் தனக்கு பிரயோசனமாகவிருக்கும் என்றெண்ணி அவளுக்கு ப்ரெண்ட் றிக்குவெஸ்ற் (friend request) நட்புக்கான அழைப்புயொன்றினை விடுகின்றாள்.
அதன் பின் இரு நாட்கள் கீர்த்தனா தனது நட்பினை தொடர்வதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தவளுக்கு இரு நாட்கள் கழித்தே அங்கீகாரம் கிடைத்தது. கீர்த்தனா அவளின் நட்பிற்கு அங்கீகாரம் வழங்கியிருந்தாலங (friend request னை accept பண்ணியிருந்தாள். ) அதன்பின் முதன் முதலில் பிரியங்காவின் ஹாய் என்ற வார்த்தையின் ஊடாக தொடங்கிய இருவரின் நட்பும் மிக நீண்ட வார்த்தைகளின் ஊடாக வளர்ந்தது.
அதுமட்டுமின்றி, இருவரும் தாங்கள் புதிதாய் தைக்கும் ஆடைகளையும் புகைப்படங்களாக எடுத்து பேஸ்புக்கின் ஊடாக பகிர்ந்து மகிழ்ந்தார்கள். சில நாட்களின் பின் தன்னை பற்றிய அனைத்து விடயங்களையும் கீர்த்தனாவுடன் பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி, பிரியங்கா தனது புகைப்படங்கள் சிலவற்றையும் கீர்த்தனாவுக்கு அனுப்பினாள்.
அவற்றை பார்த்த கீர்த்தனா பிரியங்காவிடம் “நீ பார்க்க மிக அழகாக இருக்கிறாய்” என்று கூறினாள். இவற்றையெல்லாம் கேட்ட பிரியங்காவுக்கு மனதுக்குள் அவளை அறியாமலே ஒரு பூரிப்பு…. கீர்த்தனாவின் தீவிர ரசிகையானாள் பிரியங்கா. எனவே இவற்றையெல்லாம் தனக்கு சாதகமாக்கிக்கொண்ட கீர்த்தனா, பிரியங்காவின் தாய், தந்தை, சகோதரி வீட்டில் இல்லாத நேரத்தினை சரியாக அறிந்து கொண்டு பிரியங்காவிடம் “நான் உன்னை பார்க்க வீட்டுக்கு வருகின்றேன்.” என்று உறுதியளிக்கிறாள். பிரியங்காவுக்கோ கொள்ளை இன்பம். சந்தோஷத்தில் தலை கால் தெரியாமல் துள்ளிக் குதித்தாள்.
“பேஸ்புக்கில் அறிமுகமான ஒரு தோழி, பிரபல தையல் கலை நிபுணர் என்னை பார்க்க வருகின்றாளா?” என்று பெருமிதம் கொண்டாள். அந்த நாளுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள்.
அன்று அந்த நாளும் வந்தது. பிரியங்கா முன்கூட்டியே கீர்த்தனாவை வரவேற்பதற்காக கேக், மற்றும் இனிப்பு பண்டங்கள் சிலவற்றையும் தயாரித்திருந்தாள். அப்போது வீட்டின் அழைப்பு மணி அலறுகின்றது. பிரியங்கா தனது வீட்டின் கதவை ஓடிச் சென்று திறக்கின்றாள். ஆனால் அன்று தனது வீட்டின் வாசலில் நின்றது கீர்த்தனா அல்ல.. மாறாக வேறு ஒரு ஆணே. உடனே பிரியங்கா “நீ யார்” என்று வினவுகின்றாள்..
பதிலுக்கு அவன் “நீ புகைப்படத்தில் இருப்பதை விட மிக நேரில் மிக அழகாக இருக்கின்றாய். நான் தான் உன்னோடு பேஸ்புக்கில் உரையாடிய கீர்த்தனா. எனினும் நான் கீர்த்தனா இல்லை நான் மைக்கல்” என்று கூறினான். பிரியங்காவின் உடல் மெய் சிலிர்த்தது.
பயத்தில் நா வார்த்தைகளை முடக்கியது. அவனை தன் கைகளால் தள்ளி விட்டு வேகமாக வாசல் கதவை அடைத்து விட்டு அறைக்குள் ஓடினாள். எனினும் மைக்கல் விடுவதாய் இல்லை தொடர்ந்து கதவை தட்டியவாறே வாசலில் காத்திருந்தான்.
உண்மையில் மைக்கல் என்ற பெயரைக் கொண்ட அவன் தனது பெயரை கீர்த்தனா என்ற பெண்ணின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கின் மூலம் பிரியங்காவிடம் அறிமுகப்படுத்தியதுடன் அவளை தனது ஆசைகளுக்கு சூழ்ச்சியான முறையில் பயன்படுத்தும் எண்ணத்திலேயே ஆகும்.
எனினும் அன்று மைக்கலின் எண்ணம் ஈடேறவில்லை. பிரியங்கா மைக்கலின் தொடர் தொந்தரவுகளுக்கு பயந்து பக்கத்து வீட்டிலிருந்த ஒருவரை உதவிக்கு அழைக்கின்றாள். எனவே நிலைமை மோசமாகி விடும் என்பதை உணர்ந்தவன் வேறு ஒரு வழியில் பிரியங்காவை மடக்கலாம் என்ற முடிவில் அவ்விடத்தை விட்டு மெதுவாகச் சென்று விட்டான். எனினும் அன்று அமைதியாக சென்றவன் அதன் பின் மிகவும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடத் தொடங்கினான்.
பிரியங்காவுகோ அந்த சம்பவத்தை நினைத்ததால் துாக்கம் வர மறுத்தது. தலையணை அன்று முதல் அவளுக்கு முட்களாய் மாறியது. எப்போதும் மழலை மொழியில் கொஞ்சி கொஞ்சி பேசி ,புன்னகை என்னும் பொன் நகையினை அணிந்திருப்பவளின் முகம் அன்று வாடியே இருந்தது. வேறு எதிலும் தன் சிந்தனையை செலுத்த முடியவில்லை. தையல் வேலைகளையும் ஒரு புறம் தள்ளினாள்.
மறுநாள் பகல் வேளையில் கணனியின் முன் அமர்ந்தவளுக்கு மைக்கலிடம் இருந்து ஈமெயில் கடிதங்கள் பல வந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. அவற்றில் பிரியங்காவின் மானத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக பல புகைப்படங்கள் இருந்தன. அதில் தலை பகுதி மட்டுமே பிரியங்காவுக்கு சொந்தமாகவிருக்க ஏனைய உடல் பாகங்கள் நிர்வாண நிலையிலும், அரை குறை ஆடைகளுடனும் இருக்கும் பெண்களின் உடல் பாகங்களாக இருந்தன. எனினும் அது சிறிதும் சந்தேகமின்றி பிரியங்காவின் உடலமைப்பை போன்றதாகவே இருந்தது.
பிரியங்காவுக்கோ அந்த நிலையில் அழக் கூட சக்தி இருக்கவில்லை. “நான் எப்படி அறியாத ஒருவரிடம் சிக்கிக் கொண்டேன். இனி என்ன செய்வது இதை எப்படி வேறொருவரிடம் கூறி உதவி பெறுவது” என்று ஒன்றுமே அந்த சிறிய பெண்ணுக்கு புரியவில்லை. கடைசியில் தன்னுடைய உற்ற நண்பியான நர்மதாவிடம் சரி கூறுவோம் என்று தான் நடந்த அனைத்தையும் ஒன்று விடாது நர்மதாவிடம் தொலைபேசியில் கூறினாள். அதன்பின் அன்றைய தினமே பிரியங்காவை சந்திப்பதாக பிரியங்காவின் வீட்டுக்கு வருகின்றாள் நர்மதா .
வந்தவள் உடனடியாக மைக்கலிடம் இருந்து வந்த ஈமெயில் மற்றும் அவனது போலி பேஸ்புக் கணக்கினையும் ஆராய்ந்து பார்க்கின்றாள். அப்போது இன்னுமொரு செய்தியினையும் அவளால் பார்க்க முடிந்தது. அந்த புகைப்படங்களுக்கு கீழே “என்னை பற்றி நீ யாரிடமும் சொல்லக் கூடாது நீ தையல் வகுப்புக்கு செல்லும் போது என்னை வந்து சந்திக்க வேண்டும். நாங்கள் சந்திக்கும் இடத்தை நான் உனக்கு பிறகு அறிவிக்கின்றேன். நான் சொல்லும் இடத்திற்கு மட்டும் நீ வராவிட்டால் இங்கு நீ பார்த்த அனைத்துப் படங்களையும் நான் இணையத்தில் பதிவிறக்கம் செய்து விடுவேன்.
பின் உன் மேனி அழகை இந்த உலகமே பார்க்கும் என்று எல்லாம் அந்த ஈமெயில் கடிதத்தில் பிரியங்காவிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவிருந்தது. அந்த பின் நர்மதா “இனியும் நீ பொறுத்து பயனில்லை எது நடந்தாலும் பரவாயில்லை நடந்த எல்லாவற்றையும் உன் பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் உனக்கு உதவி செய்வார்கள் ” என்று அறிவுரை வழங்கிவிட்டு சென்றுவிட்டாள்.
அன்று இரவு பெற்றோர்கள் இருவரும் வீட்டுக்கு வரும் போது பிரியங்கா கடும் காய்ச்சலினால் உடல் நடுங்கமுற்ற நிலையில் கம்பளி போர்வையினை இழுத்துப்போர்த்தியவாறு கட்டிலில் படுத்திருந்தாள். பெற்றோர் இருவரும் அவள் அருகில் சென்று விசாரிக்க பிரியங்கா நடந்த அனைத்தையும் தன் தாயின் மடியில் தலையை சாய்ந்து படுத்தவாறு கூறி முடித்தாள். பெற்றோர் இருவரும் அதிகமாக பயந்தாலும் அவற்றை பிரியங்காவிடம் காட்டிக்கொள்ளாமல் தனது மகளின் அறியாமையினால் ஏற்பட்ட ஆபத்தில் இருந்து அவளைக் காப்பாற்ற எண்ணினார்கள்.
அதன் பின் பெற்றோர் இருவரும் கணணி துரித நடவடிக்கை பிரிவினருடன் தொடர்பு கொண்டு மகளின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டார்கள். அதன் படி இச்சம்பவம் தொடர்பாக இரகசியமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்து தீர்வு கண்டார்கள்.
பிரியங்காவைப் போன்று பல பெண்கள் அறியாத நபர்களுடன் பேஸ்புக் சமூக வலையமைப்பின் ஊடாக தொடர்பினை ஏற்படுத்தி உங்களை பற்றிய முழுமையான விபரங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனினும் ஒரு விடயத்தில் கவனமாக இருக்கத் தவற வேண்டாம். பேஸ்புக்கில் இருக்கும் நபர்கள் அனை வருமே உண்மையான நபர்கள் அல்ல.
சமூக வலையமைப்புகள் இன்று உலகை சுருக்கிய ஒரு கிராமமாக மாறி வருகின்ற போதும் எப்போதும் எச்சரிக்கையுடன் செயற்படுவது வீண் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, February 3, 2015
பேஸ்புக்கினால் பெண்ணுக்கு ஏற்பட்ட பாதகம் (இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவம்)
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
No comments:
Post a Comment
Leave A Reply