ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (16) முதல் கையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கட்சித் தலைவர் பொறுப்பு உட்பட கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து, கடந்த 50 வருடங்களாகக் கட்சியைப் பாதுகாப்பதற்கு தான் அரும் பங்காற்றியிருந்ததாகவும் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் ஆபத்தைத் தான் பார்க்க விரும்பவில்லையென்று குறிப்பிட்டிருக்கும் அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விரும்புபவர்கள் என்ற ரீதியில் இந்தப் பிளவிலிருந்து கட்சியைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கிய கட்சியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, புதிய தலைமைத்துவம் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கட்சியின் நலனைப் பேணுவது மட்டுமன்றி நாடு தொடர்பிலும் அக்கறைசெலுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும் மற்றும் கட்சிக்குள் ஜனநாயகத்தைப் பேணுவதற்கும் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply