blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, November 14, 2014

கடந்த 2006ஆம் ஆண்டு பொத்துவில் ரதெல்ல பிரதேசத்தில் 10 முஸ்லிம்கள் படுகொலை: முன்னாள் புலி உறுப்பினர் கைது!!!

கடந்த 2006ஆம் ஆண்டு பொத்துவில் ரதெல்ல பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்ற 10 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதற்கு சூத்திரதாரியாக இருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினரான
மீரா என அழைக்கப்படும் பரமசோதி கோணேஸ் தற்போது கைது செய்யப்பட்டு கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
இலங்கை முஸ்லிம்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான கிறிஸ் என அழைக்கப்படும் மாணிக்கராசா சசீகரன், மீரா என அழைக்கப்படும் பரமசோதி கோணேஸ் ஆகிய இருவரையும் கடந்த எட்டு வருடங்களாக பொலிஸ் புலனாய்வு மற்றும் சர்வதேச பொலிஸ் இணைந்து தேடிவந்த நிலையில் மீரா கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் கைதுசெய்யப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை டிசம்பர் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மற்றைய எதிரியான கிறிஸ்ட் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சர்வதேச பொலிஸ் மூலம் அவரை கைதுசெய்யுமாறும் அதற்கான பிடியாணையை வழங்குவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி பொத்துவில் ரதெல்ல பிரதேசத்தில் வைத்து நஸார் நுார்தீன், மஜீட் பைறுாஸ், ஏ.றசூல் றிசாட், கபூர் அஸீஸ், எம்.எம். நவாஸ், ஏ.எப். பைஸால், என்.அஸ்மத், எம்.சம்சுடீன், கலந்தர் ஜஃபர், முகம்மட் சியாம் ஆகிய 10 பேரையும் கொலை செய்ததுடன் முகம்மட் கரீம் மீரா முகைதீன் என்பவரை கத்தியால் குத்தி காயப்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததாவும் மேற்படி எதிரிகள் மீது சட்டமா அதிபரினால் 10 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கி கல்முனை மேல் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இப்படுகொலைச் சம்பவத்துக்கு புலிகள் காரணமில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அன்று தெரிவித்திருந்தார். நேரில் சென்று பார்வையிட்ட ஹக்கீம், புலிகள் இதனைச் செய்திருப்பார்கள் என்ற முடிவுக்கு என்னால் வரமுடியாது. 
இப்படுகொலைச் சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ.நா. சபையின் பிரதிநிதியை சந்தித்துப் பேசவுள்ளதாகவும், சர்வதேச நாடுகளின் உதவியுடன் விசாரணைகளை நடத்துவதற்கு வேண்டுகோள் விடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
படுகொலைச் சம்பவ நடந்த இடமானது முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பதால்  குறித்த படுகொலை சம்பவத்துடன் இராணுவம் தொடர்பிருப்பதாக அன்று ரவூப் ஹக்கீம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவரது இராணுவ பாதுகாப்பு விலக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன????!!
பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியிலுள்ள இரத்தல்குளத்திலிருந்து நீர்ப்பாசனத்துக்காக செல்லும் வாய்க்காலின் துப்புரவுப் பணி வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை (17.09.2006) காலை 8.30 மணியளவில் தொடங்கியதாகவும் பிற்பகல் 4.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு வரவேண்டிய தொழிலாளர்கள் அன்றைய தினம் வராமையை அடுத்தே அவர்களை தான் தேடத் தொடங்கியதாகவும் குறித்த வாய்க்காலின் துப்புரவுப் பணியை ஒப்பந்த அடிப்படையில் நடாத்தி வந்த ரசீட் தெரிவித்தார்.
வழமைபோல ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு எனது வீட்டிலிருந்து தொழிலாளர்கள் மற்றும் நீர்ப்பாசன தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுடன் இரண்டு உழவு இயந்திரங்களில் வேலைத்தளம் நோக்கி புறப்பட்டோம். 8.30 மணியளவில் அங்கு சென்ற நாம் வேலைகளை தொடங்கினோம். முற்பகல் 11.30 மணியளவில் நான் வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.
னால், பிற்பகல் 4.30 மணியளவில் எனது வீட்டுக்கு வரவேண்டிய தொழிலாளர்கள் வரவில்லை. வழமையாக வேலை முடிந்ததும் கை, கால்களை கழுவி விட்டுத்தானே வருவார்களென பார்த்துக் கொண்டிருந்தேன். ஐந்து ஐந்தரையாகியும் வரவில்லை. 
 உடனே வேலைக்கு தொழிலாளர்களுடன் சென்றிருந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை கேட்டபோது மூன்றரைக்கே வேலைகளை முடித்து விட்டு தாம் புறப்பட்டு விட்டதாகவும் தொழிலாளர்களும் தமக்குப் பின்னால் புறப்பட தயாராகிக் கொண்டிருந்ததாகவும் சொன்னார்கள். 
இரவு 7.30 மணியளவில் வேலைத்தளத்தில் இருந்து இரு கையடக்கத் தொலைபேசிகளுக்கும் தொடர்புகொண்டேன். அவையும் செயற்படவில்லை.
அதையடுத்து, அறுகம்பை விசேட அதிரடிப் படை முகாமில் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்தினேன். எமது வேலைத்தளப் பக்கமாக எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
தொழிலாளர்கள் வந்து விடுவார்கள். சாஸ்திரவெளி முகாமுக்கும் தெரியப்படுத்துவோம் என அதிரடிப் படையினர் தெரிவித்தனர். 
பின்னர் சாஸ்திரவெளி முகாம் பொறுப்பதிகாரிக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினேன். அவரும் எந்தப் பிரச்சினையுமில்லை தொழிலாளர்கள் வந்து விடுவார்களென்றார்.
பின்னர் இரவு 11 மணியளவில் எமது வேலைத்தளம் நோக்கி சென்றோம். உழவு இயந்திரம் மாத்திரம் நின்றது. 
ஆட்களை காணவில்லை. ஒன்றரை மணி வரை பார்த்தோம் காணவில்லை. மீண்டும் அருகிலுள்ள சிறு கிராமப்பகுதிக்கு வந்தபோது மூன்றரை மணியளவில் எமது வேலைத்தள பக்கமாக பெரும் சத்தமொன்று கேட்டது. 
ஆள்காட்டி குருவி கத்திக் கொண்டேயிருந்தது. நாலரை மணியிருக்கும் பாணமை வீதியால் இரு ஷரோச் லைட்’டுகள் இராணுவ முகாம் பக்கமாக சென்றன. யார் போனதென்று எமக்குத் தெரியவில்லை. காலை 6.30 மணியளவில் எமது தொழிலாளர்களின் உடல்களை கண்டெடுத்தோம். ஆட்டோக்களிலும் உழவு இயந்திரத்திலும் உடல்களைக் கொண்டு வந்தோம்” என்றார் ரசீட் .
கொல்லப்பட்ட 10 இளைஞர்களது உடல்களிலும் வெட்டியும் குத்தியும் சுட்டும் கொலை செய்தமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 
படுகாயமடைந்த 55 வயதுடைய மீரா மொகைதீன் என்பவரின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டிருந்ததாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் ஈடுபட்டிருந்த ஒருவர் தெரிவித்தார். அவருக்கு எழுதத் தெரியாதெனவும் குரல்வளையில் பலமான காயமேற்பட்டுள்ளதால் கதைக்க முடியாதெனவும் தெரிவித்தார்.
இதேவேளை, மோசமான காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மீரா மொகைதீனை கல்முனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் காரைதீவுச் சந்தியில் மறித்த இரு வீதி ஒழுங்கு கண்காணிப்புப் பொலிஸார் அம்பாறை வைத்தியசாலையில் அவரை அனுமதிக்குமாறு வற்புறுத்தியதாகவும் வழமையாக அப்பகுதி முஸ்லிம் மக்கள் கல்முனை வைத்தியசாலைக்கே செல்வது வழமையெனவும் அதுவே தமது சுகாதார பிரிவின் கீழுள்ள வைத்தியசாலையெனவும் அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் குறித்து அவர் கூறுகையில், “மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான் அனைவரும். 
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சாதாரணதரப் பரீட்சைகூட எழுதவில்லை. இன்னொருவரும் திருமணமாகி 12 நாட்கள்தான் ஆகியிருந்தது. தமது குடும்பத்தைக் காப்பாற்ற சென்றவர்களின் உயிர்களை காவுகொண்டு விட்டனர்” என்றார்.
ஷகராட்டி’ என அழைக்கப்படும் இராணுவ முகாம்பொறுப்பதிகாரியான குணரட்ன என்பவருக்கும் அப்பகுதி முஸ்லிம் மக்களுக்குமிடையே நீண்ட நாட்களாக முரண்பாடுகள் இருந்து வந்தத நிலையில் இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட புலி உறுப்பினர்கள் முஸ்லிம்களை லாவகமாக படுகொலை செய்தனர். 
பின்னர் இராணுவத்தினர் பக்கம் கதையை திருப்பிவிட்டனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►