blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, September 22, 2014

மஹிந்த அரசில் இருந்துகொண்டு முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறமுடியாது!!!

மஹிந்த அரசில் இருந்துகொண்டு முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறமுடியாது! மு.காவின் சுடலைஞானம்"ஊவா மாகாணசபைத் தேர்தலில் மஹிந்த அரசு முன்னிலை பெற்றுள்ள போதிலும் எதிர்க்கட்சிகளுக்கே சாதகமான தேர்தலாக இது அமைந்துள்ளது.

இந்தத் தேர்தல் மஹிந்த அரசை பலவீனப்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்." - இவ்வாறு தெரிவித்தார் அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ரி.எம்.ஹசன்அலி எம்.பி.

"மஹிந்த அரசின் மீதான வெறுப்பை முஸ்லிம் மக்கள் நேரடியாக வெளிப்படுத்தி விட்டனர். அரசில் இருந்துகொண்டு முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற முடியாது என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்துவிட்டது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிட்டிருந்த போதிலும் ஓர் ஆசனத்தையேனும் பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது.

இந்நிலை குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன்அலி எம்.பி. கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "ஊவா மாகாணசபைத் தேர்தலில் நாம் எதிர்பார்த்த அளவில் தேர்தல் பெறுபேறுகள் சாதகமாக அமையவில்லை. அரசுக்கும் இம்முறை தேர்தல் சற்று பின்னடைவினையே ஏற்படுத்தியுள்ளது.

ஊவா மாகாண முஸ்லிம் மக்களின் நம்பிக்கையில் நாம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து து.ஆ. கட்சியில் போட்டியிட்டிருந்த போதிலும் முஸ்லிம் மக்கள் எம்மை ஆதரிக்கவில்லை என்பதே உண்மை. அத்தோடு முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சியினையே பலப்படுத்தியுள்ளது.

அரசில் அங்கம் வகித்துக்கொண்டு நாம் எமது கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் மக்கள் எம்மை ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை. அத்தோடு அரசின் மீதான வெறுப்பினை முஸ்லிம் மக்கள் நேரடியாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.

உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊவாத் தேர்தலில் களமிறங்கும் எண்ணத்தில் இருக்கவில்லை.

எனினும், மக்களின் வேண்டுகோளுக்கும் ஒரு சிலரின் கோரிக்கைகளுக்கும் அமையவே நாம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டோம். இது எமது பரீட்சார்த்த நடவடிக்கையாகவே அமைந்திருந்தது.

எனினும், இதில் மக்கள் எங்களை நிராகரித்துள்ளனர். ஊவாத் தேர்தல் பெறுபேறுகள் பிரதான எதிர்க்கட்சிகளுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாக உள்ளது; அடுத்த ஜனாதிபதித் தேர்தலைத் தீர்மானிக்கும் கட்சியாக உருவாவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

எனினும், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இன்மையும் முரண்பாடுகளுமே அரசைப் பலப்படுத்தி வருகின்றன.

அத்தோடு கடந்த காலங்களில் சிறுபான்மை மக்கள் விடயத்தில் தவறிழைத்துள்ளமை இத்தேர்தலில் அரசு சிறுபான்மை சமூகத்தின் எதிர்ப்பினை சம்பாதிக்க காரணமாக அமைந்துள்ளது. எனினும், அரசின் வெற்றி இன்னமும் முன்னோக்கியுள்ளமையானது அரசைப் பலப்படுத்தியுள்ளது.

எனவே, எதிர்வரும் காலங்களில் அரசியல் மாற்றங்கள், சமூகங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்யுமாயின் மூவின சமூகத்தின் ஆதரவுடன் பலமானதொரு ஆட்சியை அமைக்கமுடியும்" - என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►