ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய விமனப்படைத் தளபதி சீஃவ் மார்ஷல் அரூப் ரஹாவும் நேற்று சந்தித்து உரையாடினர். மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படைத் தளபதி, நேற்றுமாலை அலரி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இலங்கை - இந்தியப் படைகளின் கூட்டுப்பயிற்சி, பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன என்று ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில், இந்தியத் தூதுவர் வைகே. சின்ஹா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அரூப் ரஹா இந்த சந்திப்புக்கு முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முப்படைத் தளபதிகளையும் சந்தித்திருந்தார்.
இதற்கிடையே, இந்திய விமானப்படைத் தளபதி அரூப் ராஹா நேற்றுமுன்தினம் திருகோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, அவர், சீனக்குடாவில் இலங்கை விமானப்படையின் பயிற்சி நிலையத்துக்குச் சென்று அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்டிருந்தார்.
இதற்கு அருகிலேயே, விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு சீன நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைத் துறைமுகத்தை கடற்படைப் படகு மூலம் சுற்றிப் பார்வையிட்ட, இந்திய விமானப்படைத் தளபதி, அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆராய்ந்தார்.
மேலும், சீனக்குடாவில் இந்திய எண்ணெயக் கூட்டுத்தாபனத்தின் எண்ணெய்க் குதங்களையும் இந்திய விமானப்படைத் தளபதி பார்வையிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply