சர்வதேச தாதியர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.“தாதியர் என்பது மாறுதலுக்கான சக்தி- சுகாதாரத்திற்கான முக்கிய வளம்” என்பதே இம்முறை சர்வதேச தாதியர் தினத்தின் கருப்பொருளாகும்.
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இலங்கையில் தாதியர்கள் தற்போது பல்வேறு சவால்களை எதிர்நோக்கிவருவதாக தாதியர் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தமது கோரிக்கைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வராததால் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
தாதியர்களின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தாமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தாதியர் சேவையை மேம்படுத்துவதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என அகில இலங்கை தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் தாதியர் சேவை சீர் குலைந்துள்ளதாக சங்கத்தின் பிரதம செயலாளர் கானிமி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற இத்தருணத்தில் தாதியருக்கும் வைத்திய அதிகாரிகளுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக அப்பாவி நோயாளர்களே இறுதியில் பாதிக்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளார்.
உடனடியாக இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையலாம் என தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, சுகாதார துறையில் அனைத்து தேவைகளையும் அரசாங்கத்தினால் அல்லது அமைச்சரினால் மாத்திரம் நிறைவேற்ற முடியாது என சுகாதார அமைச்சர் மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றியபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply