blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, May 3, 2014

வடக்கில் எதிர்பார்த்த நெல் உற்பத்தியில் குறைவான அளவே இம்முறை அறுவடை- விவசாய அமைச்சர்

மழை இல்லாத காரணத்தால் வடக்கில் கடந்த பெரும்போகத்தில் நெல் விதைப்பதற்கெனத் திட்டமிட்டிருந்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பிலேயே நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முளைத்த நெற்பயிர்களும் தொடர் வரட்சி காரணமாகப் பாதியிலேயே கருகிப்போனதால் ஏறத்தாழ ஒன்றே முக்கால் இலட்சம் மெற்றிக் தொன்கள் நெல்லையே அறுவடை செய்ய முடிந்தது. இது வடக்கில் இம்முறை அறுவடையாகும் என எதிர்பார்த்த அளவில் பாதியையும் விடக்குறைவு என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வரட்சியான காலநிலையில் கடைப்பிடிக்கக்கூடிய பொருத்தமான விவசாயத் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்குதல் தொடர்பான பயிற்சிப் பட்டறை நேற்று  திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சிப் பட்டறையில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே விவசாய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,
இயற்கையாகவே ஏற்பட்டிருக்கக்கூடிய காலநிலை மாற்றங்களினாலும் சுற்றுச்சூழலின் சமநிலையில் நாம் ஏற்படுத்திவரும் பாதிப்புகளினாலும் கடும் வரட்சியை  நாம் எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது.

குடிநீர்ப் பஞ்சம் ஒருபுறம் என்றால் இன்னொருபுறம் உணவுப்பயிர்களின் விளைச்சலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு எம்மைப் பட்டினிக்குள் தள்ளிவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.  இதைத் தவிர்ப்பதற்கு வரட்சியைத் தாக்குப்பிடிக்கும் பயிரினங்களை அடையாளம் கண்டு பயிரிடுவது அவசியம் ஆகும்.

மொட்டைக்கறுப்பன் பச்சைப்பெருமாள் போன்ற நமது பாரம்பரிய நெல் ரகங்கள் ஆழமான வேர்த்தொகுதியைக் கொண்டிருப்பதால் வரட்சியை ஓரளவு தாக்குப்பிடிக்கக்கூடியதாக உள்ளன.

ஆனால் உற்பத்தி குறைவு என்பதாலும் அறுவடை செய்ய அதிக காலம் எடுக்கும் என்பதாலும்; எமது வயல் நிலங்களில்  இவை போன்ற சிவப்பரிசி ரகங்கள் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்றன.

பிலிப்பைன்சில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தில் நெற்பயிர்களின் மரபணுத்தொகுதியை விரிவாக  ஆராய்ந்து வரட்சியைத் தாக்குப்பிடிக்கக்கூடிய இயல்புகளுக்குக் காரணமான மரபணுக்கூறுகளை இப்போது அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

அம்மரபணுக்களை  ஏற்கனவே அதிக விளைச்சலைத் தந்துகொண்டிருக்கும் ஐ.ஆர் 64
சுவர்ணா வந்தனா போன்ற நெல்ரகங்களுக்குள்  புகுத்தி அதிக விளைச்சலைத்தரும் அதேவேளை அவற்றை வரட்சியைத் தாக்குப்பிடிக்கும் ரகங்களாகவும் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோன்றே எமது விவசாய ஆராய்ச்சியாளர்களும் எமது பாரம்பரிய நெல்ரகங்களை புதிய இனங்களுடன் கலப்பு இனப்பெருக்கம் செய்து வரட்சிக் காலத்தை தாக்குப்பிடிக்கக் கூடிய இனங்களைக் கண்டறிவதும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

 
 
 

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►