இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் அணித் தலைவருமான மஹேல ஜயவர்தன சர்வதேச இருபது-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறி தனது உத்தியோகபூர்வ ஓய்வு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரிக்கு இன்று காலை வழங்கியுள்ளார்.கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லே டி சில்வா மஹேல ஜயவர்தனவிடம் இருந்து கடிதத்தை பெற்றுகொண்டார்.
மஹேல, சங்கா அதிருப்தி
இலங்கை கிரிக்கெட் சபையினால் தங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த ஊடகத் தடை குறித்து இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும்
அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
5 ஆவது இருபது–20 உலகக்கிண்ணத்துடன் இலங்கை அணியினர் நேற்று முன்தினம் தாய் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இருவரும் தங்கள் மீதான ஊடகத்தடை குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
இது தொடர்பா மஹேல ஜயவர்தன தெரிவித்திருக்கையில், சங்காவுக்கும் எனக்கும் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிக்க கிரிக்கெட் சபையினால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாங்கள் உலகக்கிண்ண தொடருக்காக பங்களாதேஷ் சென்றிருந்த போது அங்கு இது உங்களின் இறுதி இருபது–-20 உலகக்கிண்ண தொடரா என கேட்கப்பட்டது.
இதன்போது எனது வயதை கருத்தில் கொண்ட நான் அடுத்த உலகக்கிண்ண த்தில் விளையாட முடியாது என்பதால் ஆம் என்று பதிலளித்தேன்.
ஆனால் இதை சரியாக புரிந்து கொள்ளாத இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர், எங்களிடம் இது குறித்து கருத்து எதனையும் கேட்காது ஊடகங்கள் சிலவற்றுக்கு எங்களைப்பற்றி தவறான தகவல்களை கூறியுள்ளார். பொறுப்பு மிக்க அதிகாரி ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டமை எங்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. தொடருக்கு முன்னதாகவே நாம் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தோம்.
அதேவேளை தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய எங்களை அணுகி அக்குழப்பநிலை குறித்து தெளிவடைந்து கொண் டார்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த குமார் சங்கக்கார, மஹேலவின் கருத்துக்கு நானும் உடன் படுகிறேன் எனவும் பத்திரிகை ஒன்று கேட்ட கேள்விக்கு இது எனது இறுதி உலகக்கிண்ணம் என்று மாத்திரமே பதில் அளித்திருந்தேன் என்றும் கூறினார். இதற்கு அப்பால் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் சில தவறான விமர்சனங்களை தெரிவித்திருந்தமை மிகுந்த கவலையளிக்கிறது.
கிரிக்கெட் சபை மறுப்பு
இலங்கை கிரிக்கெட் சபை குறித்து இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் மஹேல ஜெயவர்தன வெளியிட்ட கருத்து தவறானது என இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.
மஹேல ஜெயவர்தன, இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிட்டார்.
மேலும், தனக்கு விதிக்கப்பட்டிருந்து ஊடகத் தடை தொடர்பில் கவலை தெரிவித்த மஹேல, ஓய்வு குறித்த செய்தி விடயத்தை கிரிக்கெட் சபை சரியான முறையில் கையாளவில்லை எனவும் பொறுப்புள்ள அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்தும் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே மஹேல ஜெயவர்தன வெளியிட்ட கருத்து தவறானது என இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.
இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் அதன் அதிகாரிகளின் நற்பெயர்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் மஹேல வெளியிட்டுள்ள கருத்துக்கள் அமைந்திருக்கின்றன.
உலக இருபது–-20 கிண்ண தொடரின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க இலங்கை கிரிக்கெட் சபை தடை விதித்ததாக மஹேல நேற்றைய (நேற்று முன்தினம்) ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எனினும், கிரிக்கெட் வீரர் ஒருவர் ஓய்வு பெறுவது போன்ற முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் போது முதலில் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்திருக்க வேண்டும் .
ஆனால், மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும் தங்களது ஓய்வு அறிவிப்பை முதலில் ஊடகங்களுக்கே விடு த்திருந்ததாக இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டிருந்தது.
ஓய்வு கடிதம்
இந்நிலையில் மஹேல ஜயவர்தன தனது உத்தியோகபூர்வ ஓய்வு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரிக்கு இன்று காலை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply