ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை 2035 இல் 24 மில்லியனாக உயரும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
உலகைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
புற்றுநோய் மருத்துவத்திற்கான செலவு கட்டுப்பாட்டை மீறி அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
புற்றுநோய் பரவுவதால் ஏற்படும் மேலதிகச் செலவு வளர்ந்து வரும் நாடுகளினாலேயே சமாளிக்க வேண்டியிருக்கும் என்றும் அது கூறுகிறது.
2014ம் ஆண்டுக்கான புற்றுநோய் குறித்த அறிக்கையை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம், தடுக்கப்படக்கூடிய புற்றுநோய்க் காரணிகளாக:
பிடித்தல்
கிருமித்தொற்று
மது அருந்துதல்
உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி செய்யாதிருத்தல்
சூரிய ஒளி மற்றும் மருத்துவ ஸ்கேன்களால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்பு
காற்று மாசு, மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள்
தாய்மைப் பேறு தாமதமாவது, குழந்தைகள் அதிகம் பெறாமல் தவிர்ப்பது, தாய்ப்பால் தராமலிருப்பது
ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது.
பெரும்பாலான நாடுகளில் மார்பகப் புற்றுநோய்தான் பெண்கள் மத்தியில் புற்றுநோய் தோன்றுவதற்கு மிகப் பொதுவான காரணம். ஆனால், ஆப்ரிக்காவின் பல பகுதிகளில், பெண்களுக்கு அதிகம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயே அதிகம் காணப்படுகிறது.
புற்றுநோய்க்கும் மது அருந்துவதற்கும் இடையேயான தொடர்பைப் பற்றிக் கூறும், இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான, அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசியர் டாக்டர் பெர்னார்ட் ஸ்டூவர்ட், மனித நடத்தைதான் பல வகைப் புற்றுநோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்றார்.
மிக அதிகமாக உடலைப் பழுப்பாக்கிக்கொள்ள சூரியக் குளியலில் ஈடுபடுவது, மது அருந்துவது போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் புற்று நோய் தவிர்க்கப்பட முடியும் என்று அவர் கூறுகிறார்.
'மது தாராளமாகக் கிடைப்பதைக் கடினமாக்குவது, மது போத்தல்களில் லேபல்கள் ஒட்டுவதில் கவனம் செலுத்துவது, மதுவை விற்பதில் உள்ள விளம்பர முறைகள் மற்றும் மதுவின் விலை போன்றவைகளைப் பற்றி நாம் விவாதிக்கவேண்டும்', என்று ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.
அதேபோல விலைகளை உயர்த்துவது, விளம்பரங்களை கட்டுப்படுத்துவது போன்ற கடுமையான வழிகள் மூலம் மது மற்றும் சர்க்கரை உட்கொள்ளுதலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.(பிபிசி)
No comments:
Post a Comment
Leave A Reply