blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 22, 2014

தமிழ்நாட்டில் வளர்ந்தவர்கள் புலிகள்: கருணாநிதி

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை தமிழருக்கு எதிராக செயற்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்போது அவர்களுக்காக நீலிக் கண்ணீர்வடிக்கிறார் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள கருணாநிதி கூறியுள்ளதாவது,

'இலங்கையிலே உள்ள போராட்டம் உங்களுக்குத் தெரியும். அந்த இலங்கைப் போராட்டம் அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு விடுதலை தேவை என்பதற்காக நடத்துகின்ற போராட்டம். அந்தப் போராட்டத்தின் விளைவாக விடுதலைப் புலிகள் தோன்றி, அப்படி தோன்றிய விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிலேயும் பரவி, இங்கே நம்முடைய ஆதரவையெல்லாம் பெற்று, குறிப்பாக என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய ஆதரவையும் பெற்று, அதற்குப் பிறகு தொடர்ந்து நான் முதலமைச்சராக இருந்த நேரத்திலே என்னுடைய ஆதரவையும் பெற்று தமிழ்நாட்டிலே வளர்ந்தவர்கள் விடுதலைப் புலிகள்.

அப்படி வளர்ந்த விடுதலைப் புலிகள் கடுமையான போரிலே ஈடுபட்டார்கள். யாரை எதிர்த்து? இலங்கையிலே இருக்கின்ற கொடுமையாளர்கள் சிங்களவர்களை எதிர்த்து போரிட்டார்கள். அப்படி போர் நடந்தபோது அந்த விடுதலைப் புலிகளாக இருந்தவர்களுக்கு தமிழ்நாட்டிலே சில தலைவர்கள் ஆதரவு கொடுத்தார்கள். நானும் கொடுத்தேன். நம்மைப் போன்றவர்கள் கொடுத்த ஆதரவால் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிலே செல்வாக்கோடு வளர்ந்து, தங்களுடைய பலத்தைப் பெருக்கிக் கொண்டார்கள்.

அந்த நேரத்தில் அந்த விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும், அவர்கள் இலங்கைக்கு எதிராக போராடுவதை நிறுத்த வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பியது. அந்தக் கூட்டத்திற்கு தலைமை யார் தெரியுமா? நம்முடைய சாட்சாத் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாதான்.

அந்த அம்மையார் தன்னுடைய ஆட்சியில் - இப்பொழுதும் அவரது ஆட்சி நடக்கிறது - அப்பொழுது ஒரு தீர்மானம் போட்டார்கள். சட்டசபையிலே தீர்மானம் போட்டார்கள். அதை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது. சட்டப்பேரவையிலே ஜெயலலிதா போட்ட ஒரு தீர்மானம், இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது என்று தீர்மானம் போட்டார்கள்.

எந்த ஜெயலலிதா முதலமைச்சராக வீற்றிருந்தாரோ அந்தச் சட்டமன்றத்திலே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆகா, பிரபாகரன் தமிழர்களுக்காக பாடுபட்டவர், தமிழர்களுக்காக உயிர் கொடுத்தவர் என்று இன்றைக்கு எந்த பிரபாகரனைப் பற்றிப் பாராட்டிப் பேசுகிறாரோ, அந்தப் பிரபாகரனை உடனடியாகக் கைது செய்து இலங்கை அரசு இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

யாரை? பிரபாகரனை. எந்த பிரபாகரனை? இன்றைக்கு பிரபாகரன் பெரிய ஆள், மாவீரன், அவனை இழந்தது நாம் செய்த தவறு என்று பேசிய இதே ஜெயலலிதா, நீலிக்கண்ணீர் வடிக்கின்ற ஜெயலலிதா, அன்றைக்கு பிரபாகரனை கைது செய்து கொண்டு வாருங்கள், அவர் அங்குள்ள தமிழர்களுக்குத் தலைவராக இருக்கலாம். எனவே இலங்கைப் போராட்டத்திலே ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சாதாரணமான இடத்திலே அல்ல, இந்தச் சட்டப்பேரவை வற்புறுத்துகிறது என்று சட்டப்பேரவையிலே தீர்மானம் போட்ட அம்மையார்தான், இன்றைக்குப் போலிக் கண்ணீர் வடிக்கிறார்.

இன்றைக்கு இலங்கையிலே உள்ள விடுதலைப் புலிகளுக்காக நான் வாதாடுவேன், போராடுவேன் என்றெல்லாம் கதை கட்டுகிறார். அத்தனையும் பொய். அத்தனையும் மாய்மாலம். அத்தனையும் மக்களை ஏமாற்றுகின்ற தந்திரம். நான் தமிழனுக்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல்லுகின்ற பொய் மூட்டை, புளுகு மூட்டை.

எந்தப் பிரபாகரனை கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னாரோ, அந்தப் பிரபாகரனை மாத்திரமல்ல, அவரைச் சார்ந்த விடுதலைப் புலிகள் யாராக இருந்தாலும், அவர்களில் யார் ஒருவரையும் இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதிக்க கூடாது. யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் - யார்? ஜெயலலிதா கொடுத்த சர்ட்டிபிகேட் - ஒரு முதலமைச்சர் அன்றைக்கு விடுதலைப்புலிகளைப் பற்றி சொல்லி இந்தியாவின் பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் இந்த மண்ணில் காலூன்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட கூடாது, அனுமதிக்கப்படக்கூடாது என்று தீர்மானம் எழுதி சட்டசபையிலே நிறைவேற்றப்பட்டு, ஆஹா! ஜெயலலிதா அல்லவா இவ்வளவு பெரிய வீராங்கனை! என்று பேரும் புகழும் பெற்றவர்.

அவர் நிறைவேற்றிய தீர்மானம்தான் இது. அவரை தமிழ் மக்களுக்குக் காவலர், தமிழ் மக்களின் பாதுகாப்பாளர், தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்றெல்லாம் இங்கே உள்ள தமிழர்களும் இன்றைக்கும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய கபடநாடகம், அந்த கபட நாடகத்தை நம்பி ஏமாந்து போகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலும் சொல்லுகிறார் ஜெயலலிதா அந்த தீர்மானத்தில். இலங்கை அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால் இலங்கை அரசின் அனுமதியோடு இந்திய ராணுவத்தை இலங்கை அரசு உதவிக்கு அனுப்பி, நம் இராணுவத்தை இலங்கை அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறைப் பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக்கொள்கிறது இந்த தீர்மானத்தை முன்மொழிந்தவர் சாட்சாத் இதே ஜெயலலிதாதான்.

இது மாத்திரமல்ல் இலங்கைத் தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்த போது இதே ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? 17 – 1 - 2009 அன்று அவர் விடுத்த அறிக்கையில், 'இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான். இலங்கையில் இப்போது என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல், விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக இராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளைப் போல உருவகப்படுத்தி, அவர்கள் மீது பழியைப் போட்டவர்தான் இந்த ஜெயலலிதா என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், இன்றைக்கு இலங்கையிலே யுத்தம் முடிந்து பிரபாகரன் மாண்டு, ஆயிரக்கணக்கான தளபதிகளும், லட்சக்கணக்கான இலங்கைத் தமிழ் வீரர்களும் மாண்டொழிந்து, அங்கே மீண்டும் சுதந்திரக் காற்று வீசாதா? விடுதலைப் புயல் கிளம்பாதா? என்று இலங்கைத் தமிழ் மக்கள் வாடிக்கொண்டிருக்கின்ற இந்தக் காலத்தில் இலங்கையிலே உள்ள தமிழர்களுக்காகப் போராடியவர்கள் தாங்கள் தான் என்று விளம்பரப் படுத்திக் கொள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு அதைச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது?

பிரபாகரனைப் பிடித்து சிறையிலே போடு, உன்னால் முடியாவிட்டால் இந்தியாவிலே உள்ள ராணுவத்தை அனுப்பச் சொல்லி, அவனை கைது செய் என்று சொன்ன ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு காட்டியவர் என்று யாரோ சில பேர் சொல்லுவதும், அதைச் சில பேர் நம்பி ஏமாறுவதும் கடைந்தெடுத்த கோழைத்தனம், ஏமாளித்தனம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அதற்காகத்தான் இந்த பழைய கால நிகழ்வை இப்போது உங்கள் முன்னால் வைத்தேன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இலங்கைப் போருக்கும் என்ன சம்மந்தம் என்று யாராவது கேட்டால், அந்த இலங்கைப் போரிலே உயிர் நீத்த உத்தமர்கள், பிரபாகரன் போன்றவர்கள், அவர்களெல்லாம் பட்ட பாட்டிற்கு, அவர்களுக்கெல்லாம் கிடைத்த பரிசுக்கு நாம் சிந்திய கண்ணீர் பரிகாரம். நாம் விடுத்த பெருமூச்சு, அந்த மக்களுக்காக நாம் விட்ட மூச்சு என்பதை யாரும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட தொப்புள் கொடி உறவு கொண்ட தமிழன் இலங்கையிலே இன்னுமும் வாடிக் கொண்டிருக்கின்றான். இலங்கையிலே இன்னமும் அவனை நசுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட தமிழனைக் காப்பாற்ற நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். அவனைக் காப்பாற்ற நம்மைத் தவிர, தமிழகத்திலே வேறு யாரும் நாதியில்லை.

மத்தியிலே இருக்கின்ற காங்கிரஸ் அரசும் அங்கே உள்ள தமிழர்களைக் கைவிட்டுவிட்டது. நாம் அதற்காகவே நம்முடைய வெறுப்பைக் காட்ட, நம்முடைய கண்டனத்தைக் காட்ட காங்கிரஸ் கூட்டணியிலே இருந்து நம்மை விலக்கிக் கொண்டோம். நாம் இன்றைக்கு தனித்து தமிழகத்திலே ஒரு சில தோழமைக் கட்சிகளை மாத்திரம் இணைத்துக் கொண்டு நாம் போட்டியிடுவதற்குக் காரணமே, காங்கிரஸ் பேரியக்கத்தை நம்மால் நம்ப முடியவில்லை.

அவர்கள் தங்களுடைய காரியத்தைப் பார்த்துக் கொண்டார்களே தவிர, நம்முடைய தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்த பரிசுத்தமான எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆகவேதான் நம்மை நாம் அந்தக் கட்டை அவிழ்த்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தனக்குரிய சில தோழமைக் கட்சிகளோடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கானாலும், நம்முடைய தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற எந்தக் கட்சியானாலும், அந்தக் கட்சிகளோடு இங்கேயுள்ள இஸ்லாமிய இயக்கங்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு, ஒரு சிறிய கூட்டணிதான்;

ஆனாலும், நம்முடைய எண்ணங்கள் சிறியவை அல்ல் பெரியவை. இந்த சிறியக் கூட்டணியின் மூலமாக நம்மை அகில உலகத்தில் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்கள் என்ற அந்தப் பெருமையோடு, அந்த நினைப்போடு வாழ்ந்தால், அந்த வாழ்க்கைதான் வீர வாழ்க்கை. அந்த வீர வாழ்க்கையை நாம் என்றைக்கும் மறக்கமாட்டோம்.

அந்த வாழ்க்கையைத் தொடருவதற்காகத்தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நம்முடைய இந்தியத் திருநாட்டிலே நடைபெறுகின்ற இந்தத் தேர்தலைக் கூட நாம் அணுகுகிறோம். நாம் பெரும் பதவிகளிலே அமர வேண்டும் என்பதற்காக அல்ல.

நம்முடைய எண்ணங்களை வலுப்படுத்த, நம்முடைய குறிக்கோளை வென்றெடுக்க நாம் ஈடுபட்டிருக்கின்ற இந்தக் காரியத்தில் நிச்சயமாக இன்று இல்லாவிட்டாலும் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள் வெற்றி அடைவோம். அந்த வெற்றியின் குறிக்கோள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையிலே ஏதோ சிறு சிறு லாபங்களுக்காக அல்ல, சிறு சிறு பயன்களுக்காக அல்ல. பெரும் பயன்.

இலங்கையிலே தமிழனுடைய வாழ்க்கை உத்தரவாதம் பெற்று விட்டது என்ற அளவிற்கு இலங்கைத் தமிழர்களை வாழ வைக்கின்ற அந்த நிலையும், அதற்கு இடையூறாக வருகின்ற எந்தச் சக்தியானாலும் அதை முறியடிக்கின்ற நிலையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. நாம் அதை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்' என கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►