அரசமைப்பு ஏற்பாடுகள் தொடர்பிலோ அல்லது சட்ட விவகாரங்கள் சம்பந்தமாகவோ தமக்குத் தெளிவோ, விளக்கமோ தேவைப்படுகின்றன என ஜனாதிபதி கருதினால் அவ்விடயம் குறித்து உயர்நீதிமன்றத்திடம் அவர் கருத்துக் கேட்கலாம் என்று அரசமைப்பின் 29 ஆவது பிரிவு கூறுகின்றது. 'ஆலோசனை நியாயாதிக்கம்' என்ற தலைப்பில் அரசமைப்பின் கீழ் உயர்நீதிமன்றத்துக்கு இந்த விசேட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி கோரும் விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் ஆலோசனை, சட்டக் கடப்பாடுடைய (Legal Binding) தீர்ப்பாக அமையாது என்பதும், வெறும் சட்ட ஆலோசனையாக மட்டுமே அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகள் இவ்வாறு சில சட்ட ஏற்பாடுகள் குறித்து உயர்நீதிமன்றத்திடம் சட்ட வியாக்கியானமும் விளக்கமும் கோரிய நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.
எனினும், அவ்வாறு ஜனாதிபதி ஒருவர் சட்ட விளக்கம் கோரும் சந்தர்ப்பத்தில், அவ்விடயம் குறித்து உயர்நீதிமன்றம் விசாரித்து, பரிசீலித்து, தனது கருத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கலாம் என்று மட்டுமே அரசமைப்பு கூறுகின்றது.
அத்தகைய விடயம் தொடர்பான விசாரணை அல்லது பரிசீலனை உயர்நீதிமன்றத்தில் பகிரங்க அமர்வாக நடைபெற வேண்டுமா அல்லது மூடிய அறையில் நடைபெறலாமா என்பதை அரசமைப்பு திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தவில்லை.
தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்திடம் கோரியிருப்பதாகக் கூறப்படும் வியடம் தொடர்பில் உயர்நீதிமன்றம் நாளை புதன்கிழமை காலை மூடிய அறையில் - பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ அலுவலக அறையில் - கூடி ஆராயும் என்றும், பிரதம நீதியரசர் உட்பட மூன்று நீதியரசர்கள் இந்த விடயத்தைப் பரிசீலனை செய்வர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஜனாதிபதி என்ன விடயங்கள் குறித்து சட்ட விளக்கங்களை அல்லது சட்ட ஆலோசனைகளை உயர்நீதிமன்றத்திடம் கோரியிருக்கின்றார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
ஜனாதிபதியின் சார்பில் அவரது செயலாளர் பிரதம நீதியரசருக்கு முகவரியிட்டு அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
இவ்விடயம் குறித்து எந்தத் தரப்பும் உத்தியோகபூர்வ அறிவித்தலை இன்னும் விடுக்காததால் இவ்விடயம் பற்றிய செய்தியை வெளியிடுவதில் கொழும்பு ஊடகங்கள் பின்நிற்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலை 2014 நவம்பர் 20ஆம் திகதிக்குப் பின்னர் தாம் அறிவிப்பதற்கு சட்டத்தில் இடமுண்டா, அவ்வாறு அறிவித்த பின்னர் அந்தத் தேர்தலில் மூன்றாவது தடவையாகத் தாம் போட்டியிடச் சட்டரீதியாகத் தடை ஏதும் உண்டா என்ற விடயங்கள் குறித்தே உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையை ஜனாதிபதி கோரியிருக்கின்றார் என்று நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply