சிட்னியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், இந்தத் தீர்மானத்தை அறிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுசெல்லப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்குள்ள தடுப்புக்காவல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த 157 பேரையும் இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்திக்கும் வரை அவுஸ்திரேலியாவில் தடுத்து வகைகப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை தமது கொள்கை மற்றும் சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் ஸ்கொட் மொறிசன் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது இந்திய அதிகாரிகளுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தாகவும் பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கொன்றை அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றம் அடுத்த மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவிலிருந்து இவர்கள் பயணித்த படகு புறப்பட்டிருந்ததால் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் அவுஸ்திரேலியா முயற்சித்திருந்தது.
எனினும் இவர்களில் பெரும்பான்மையானோர் இலங்கைத் தமிழர்கள் என்று கருதப்படும் நிலையில், அனைவரையும் தாம் பொறுப்பேற்க இந்தியா மறுத்திருந்தது.
இந்த சூழ்நிலையிலேயே படகில் இருந்தவர்களை தமது மண்ணுக்கு கொண்டுசெல்ல அவுஸ்திரேலிய அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.
இதேவேளை, 157 புகலிடக் கோரிக்கையாளர்களுள், இந்தியர்கள் காணப்படுவார்களாயின் அவர்களை ஏற்றுக் கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது.
157 புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முதல் தடவையாக இந்தியா தமது நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்துள்ளதாக பிபிசி தெரிவிக்கின்றது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடந்த 23 ஆம் திகதி அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், இந்தியாவின் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சுக்களுடன் இடம்பெற்ற கலந்துறையாடல்கள் குறித்தும், இந்தியா கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்ப்டுள்ளது.
இந்தியாவிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை என இந்திய அரசு கொள்கையாக கொண்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய அரசு தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு, அவுஸ்திரேலியாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், புகலிடக் கோரிக்கையாளர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை, அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தியா அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழ் அகதிகள் என பரவலாக கூறப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகில், இந்திய குடியுரிமை உள்ளவர்களையும், இந்திய உள்நாட்டுச் சட்டப்படி நாட்டிற்கு திருப்பி அழைத்துக் கொள்வதற்கு தகுதியானவர்களையும், மீள அழைத்துக் கொள்ள இந்திய அரசு தயார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply