
இதற்கு அக்கட்சிகளின் தலைவர்களினதும், உயர்மட்டத்தினதும் பூரண ஆதரவுள்ளது. எனினும், சில மாகாண சபை உறுப்பினர்களின் மனவருத்தங்களினால் இம்மாகாண சபையின் ஸ்திரத்தன்மைக்கு எதனையும் செய்ய முடியாது. - இவ்வாறு இராஜாங்க சுகாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஹசனலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கிழக்கு மாகாணசபை கலைக்கப்படக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கிழக்கிலிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே இராஜாங்க அமைச்சர் ஹசனலி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துக் கூறுகையில்:- "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குமிடையில் எந்தவிதமான முறுகல் நிலையும் இல்லை.
இவ்வாறான கருத்துக்களை எமக்கு எதிரான சிலர் வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்பந்தன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகிய கட்சித் தலைவர்களுக்கிடையில் உடன்பாடு உள்ளது. இதற்கமையவே தற்போது கிழக்கு மாகாண சபை செயற்பட்டு வருகின்றது. கட்சிகளுக்கிடையில் எந்தவித பிரச்சினையும் இல்லை.
எனினும், கட்சி உறுப்பினர்களிடையே தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம். இது கிழக்கு மாகாண சபை பிரச்சினையாக கருதுவதை விட அக்கட்சிப் பிரச்சினையாகவே பார்க்க வேண்டும்.
அவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அது தொடர்பில் அவர்களது கட்சித் தலைவருடன் பேச்சு நடத்துவதே சிறந்தது எனக் கருதுகின்றேன்.
கிழக்கின் முதல்வர் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தீர்மானமெடுக்கும் முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால தந்திருந்தார். இதற்கமைய ஹாபிஸ் நஸீர் அஹமட் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மாகாண சபை கலைக்கப்படும் என பேச்சில் குறிப்பிட்டாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரே அதனைச் செய்ய முடியும். இது ஒருபோதும் சாத்தியப்படாது" - என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply