ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தல், அரசமைப்பின் 17ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல் உட்பட முக்கிய சில சரத்துகளடங்கிய அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில்நாளை புதன்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
அமைச்சரவைக்கும் மேலான சபையான தேசிய நிறைவேற்றுச் சபையின் வாராந்த கூட்டம் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, இறுதிமுடிவு எடுக்கப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டவரைவு ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் கூடிய அரசமைப்பு மறுசீரமைப்புக் குழுவும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய நிறைவேற்றுச் சபையில் இதற்கு அனுமதி கிடைத்ததும், அது எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றில் அவசர சட்டமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. தேர்தல் முறைமையில் மாற்றம், அரசமைப்பின் 18ஆவது திருத்தச்சட்டத்தை இரத்து செய்தல் ஆகிய விடயங்களும் புதிய சட்டவரைவில் உள்ளடக்கப்படவுள்ளது.
17ஆவது அரசமைப்பின்படி, புதிய சில ஆணைக்குழுக்களும் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றிலிரண்டு பேரின் அனுமதி அவசியம் என்ற விடயமும் 19ஆவது திருத்தச்சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசமைப்பின்படி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குரிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply