blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, February 11, 2015

இன ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக கிழக்கு மாகாணம் மாற்றியமைக்கப்படும்: கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட்

“எனது ஆட்சிக்காலத்தில் இன ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக கிழக்கு மாகாணம் மாற்றியமைக்கப்படும்” என கிழக்கின் புதிய முதலமைச்சராக நேற்று கடமைப் பொறுப்பேற்றுக் கொண்ட நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கடமையேற்றபின் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றியபோது,

3 மாவட்டங்களையும் 3 இன மக்களையும் பிரதிநிதி படுத்துகின்ற இந்த கிழக்கு மாகாண சபையில் அதன் முதலமைச்சராக பணியாற்ற எனக்கு கிடைத்த மகத்தான சந்தர்ப்பத்தையிட்டு முதலில் இறைவனுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

என்மீது நம்பிக்கை வைத்து இப்பாரிய பொறுப்பை எனக்கு வழங்கிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், இந்த நாட்டை வழிநடத்துகின்ற அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கும் எனது விசேட நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்து கொள்கின்றேன்.

அதுபோலவே எனது கட்சியின் கௌரவ செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்களுக்கும் குறிப்பாக இந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற அத்தனை உறுப்பினர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

கடந்த அரசினால் எமது கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் இப்பதவியை எமக்காக விட்டு தந்து தனது பெருந்தன்மையை வெளிப்படுத்திய எனது மதிப்பிற்குரிய முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களுக்கும் எனது சிறப்பு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

இந்த நாட்டில் நிலவிய யுத்த வடுக்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட 2 மாகாணங்களில் கிழக்கு மாகாணமும் ஒன்று.

அந்த வகையில் கடந்த 2 தசாப்தங்களுக்கு மேலாக இந்த மாகாணத்தில் பின்னடைந்து காணப்படுகின்ற மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதற்கும், இந்த மாகாணத்தில் முடங்கிப் போய் கிடக்கிற பொருளாதார அபிவிருத்திகளை துரித வேகத்தில் மீள கட்டி எழுப்புவதற்கும் நாம் முழு மூச்சுடன் செயற்பட்டாக வேண்டும்.

சகல துறைகளிலும் தன்னிறைவு கண்ட மாகாணமாக, கிழக்கை நாம் மாற்ற வேண்டும்.

சகல இன மக்களும் சாந்தி சமாதானத்துடன் ஒன்றிணைத்து, பின்னிப்பிணைந்து செழிப்புடன் வாழ்கின்ற ஒரு முன்மாதிரி மாகாணமாக இதை மாற்ற வேண்டும்.

நமக்கிருக்கின்ற மிக குறுகியகால எல்லைக்குள் இந்த இலக்குகளை நாம் அடையப் பெறுவதற்கு நமக்குள் இருக்கின்ற குறுகிய அரசியல் மனப்பாங்கையும், கருத்து வேறுபாடுகளையும், கட்சி வேறுபாடுகளையும், இன ரீதியான எண்ணங்களையும் தூக்கி எறிந்து மாகாணம், நாடு என்ற ரீதியில் நாம் செயல்பட்டாக வேண்டும்.

நான் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சியை கொண்டோ நான் சார்ந்த ஆட்சியை கொண்டோ அல்லது மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் யாரும், யாருக்கும் எந்தவொரு அநீதமும், புறக்கணிப்பும் செய்ய இடமளிக்க போவதில்லை என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன்.

கடந்த காலங்களில் நான் வகித்த அமைச்சு பதவியை கொண்டு இயன்றவரை சேவை செய்ய எனக்கு ஒத்தாசை புரிந்த அத்தனை அதிகாரிகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

அதேபோன்று என் மீது இப்போது சுமத்த பட்டிருக்கின்ற இந்த பொறுப்பையும் என்மீது இந்த நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும், நமது மக்களும், நீங்களும், எனது கட்சியும் வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் வீணடிக்காமல் முழுமையாக நிறைவேற்ற உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துளைபுக்களையும் எதிர் பார்க்கிறேன்’ என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►