blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

80104

Saturday, February 28, 2015

ஒபாமா எந்த மதம்??????

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேள்வியை எழுப்பிய ஆய்வின் முடிவால் அமெரிக்க அரசியலில் பெரும் சலசலப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் வெளிவந்த செய்தியின் விவரம்:

அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் தியோடாரிடிஸ் தனது முனைவர் பட்டத்துக்காக, அமெரிக்க செனட்சபை தேர்தல் குறித்த ஆய்வை தொடங்கினார்.

அதில் ஒரு கட்டமாக அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்ற கேள்வியை பலதரப்பட்ட அமெரிக்கர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

இதில் ஒபாமா ஒரு இஸ்லாமியர், கிறிஸ்தவர் அல்லது நாத்திகர் என்று பல்வேறு வகையான பதில்கள் அவருக்கு கிடைத்தன.

பதில்களுக்கான காரணங்கள் மிகவும் ஆச்சரியமூட்டும் விதமாக இருந்தது. முக்கியமாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் ஒபாமாவை இஸ்லாமியராக தாங்கள் கருதுவதாக கூறியுள்ளனர்.

அதாவது எதிர்க் கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்களில் 54 சதவீதத்தினர் ஒபாமாவை ‘இஸ்லாமியர்’ என்றனர். 29 சதவீதத்தினர் அவரது மதம் குறித்த விவரம் தெரியாது என்றனர்.

அவரது ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களில் 10 சதவீதத்தினர், ‘ஹுசைன்’ என்ற அவரது நடுப் பெயரால் சற்று குழப்பமடைந்திருந்தாலும் அவரை கிறிஸ்தவராகவே பார்க்கின்றனர்.

இந்த குழப்பத்துக்கு காரணம், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபோது, பைபிள் மீது உறுதியெடுத்துக்கொண்டு, பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் (முன்னாள் அமெரிக்க அதிபர்கள் தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் ஜான் க்யின்ஸி ஆகியோர் அந்த முறையை தவிர்த்தனர்).

26 சதவீத சுயேச்சைகளை ஆதரிக்கும் மக்கள் ஒபாமாவை ‘இஸ்லாமியர்’ என்றனர்.

பேராசிரியர் அலெக்ஸ் தியோடாரிடிஸின் இந்த ஆய்வின் முடிவு, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் தியோடாரிடிஸ் கூறும்போது, “ஒபாமா எதன் மீது நம்பிக்கை கொண்டவர் என கேட்க விரும்பினேன். பல இடங்களில் ஒபாமா, தான் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இருந்தபோதிலும், அவரை இஸ்லாமிய மதத்தவர் என்று பலர் தெரிவித்தது ஆச்சரியமாக இருந்தது. இந்த பதில் அவர் மீது பலருக்கும் நம்பிக்கை இல்லாததை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. விஸ்கின்சன் மாகாண ஆளுநர் ஸ்காட் வாக்கர், ‘ஒபாமாவின மத நம்பிக்கை குறித்து தெரியாது’ என்றார்.
”ஏற்றுகொள்ள முடியாதது என்னவென்றால், 83 சதவீதத்தினர் ஒபாமா இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர் என்றும் அல்லது தெரியாது என்றும் கூறியதுதான்” என்று தியோடாரிடிஸ் கூறினார்.

இந்த ஆய்வின் முடிவு அமெரிக்க அரசியலில் மிகப் பெரிய விவாதப் பொருளாகியுள்ளது.

‘தி வாஷிங்டன் போஸ்ட்’- ல் இந்த ஆய்வு குறித்து கட்டுரை வெளியானபோது, அதன் பிரபல பத்திரிகையாளர் ஜானதான் கேப்ஹார்ட், “குடியரசு கட்சியினர் என்றைக்குமே ஒபாமாவை கிறிஸ்தவராக எண்ணியதில்லை.

2010-ல் ப்யூ ஆய்வு மையம் வெளியிட்ட ஆய்வில் 31 சதவீதத்தினர் ஒபாமாவை இஸ்லாமியராக எண்ணுவதாகவும் 31 சதவீதத்தினர் அவரது மத நம்பிக்கை குறித்து தெரியாது என்றும் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டது.

2009-ல் அமெரிக்க அதிபராக ஒபாமா தெர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் வந்த தகவலைவிட, அடுத்தடுத்த ஆய்வு முடிவுகள் அவரை இஸ்லாமிய மத நம்பிக்கை கொண்டவராக பார்ப்பதாக கூறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மத நம்பிக்கை குறித்த இந்த ஆய்வின் முடிவு அந்நாட்டு அரசியலில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
விஸ்கின்சன் மாகாண ஆளுநர் ஸ்காட் வாக்கர், அரசியல் நெருக்கடியை தவிர்த்துக்கொள்ளவே, ‘ஒபாமாவின மத நம்பிக்கை குறித்து தெரியாது’ என்று கூறியதாக பத்திரிகையாளர் ஜானதான் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில், அதிபர் ஒபாமாவின் தேசபக்தி குறித்த சான்று அத்தகைய தூரம் வெளிப்படையாக இருக்கவில்லை என்று நிரூபிக்கும் வகையில் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கை முடிவுகள், அவரது இனத்தை தாண்டி ஹுசைன் என்ற அவரது நடுப்பெயர் காரணிகள் இந்த ஆய்வின் முடிவுக்கும் அதிலிருந்து ஏற்பட்டிருக்கும் சலசலப்புக்கும் காரணமாக உள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-The Hindu-

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►