blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, December 13, 2014

இங்கே இந்துக்களை பந்தாடிவிட்டு, அங்கே இந்து கடவுளிடம் மன்றாடி நிற்பது நியாயமா!!?

இங்கே இந்துக்களை பந்தாடிவிட்டு, அங்கே இந்து   கடவுளிடம் மன்றாடி நிற்பது நியாயமா ?திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் உலக வாழ் இந்துக்களின் புனித ஸ்தலம். கிறிஸ்தவர்களுக்கு வத்திகானும், இஸ்லாமியர்களுக்கு மக்காவும் எப்படியோ, அப்படியே இந்துக்களுக்கு திருப்பதி ஆகும்.

இந்நிலையில் இங்கே வாழும் இந்துக்களை பந்தாடிவிட்டு, உலக இந்துக்களின் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்றாடுவது நியாயமா? நம் நாட்டில் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் மக்களுக்கு எதிராக தீவிரவாதத்தை வளர்த்து விட்டு, பெளத்த சகோதரர்களுடன் நமக்கு இருக்கின்ற நல்லுறவை கெடுக்கும் தீவிரவாதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி விட்டு, இப்போது வெங்கடாசலபதியின் அருளை கோருவது நியாயமாகுமா? என கொழும்பு கிருலப்பனையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது எதிரணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
mano-ganesan-mahinda
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எம்.பிக்கள் எரான் விக்கிரமரட்ன, ரோசி சேனாநாயக்க ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன் தமதுரையில் மேலும் கூறியதாவது - தகர்த்தெறியப்பட்ட எத்தனையோ அம்மன், சிவன், முருகன், விஷ்ணு, விநாயகர் ஆலயங்களின் பட்டியல் எங்களிடம் உண்டு.

சமகாலத்தில் தம்புள்ளையிலும், கொழும்பு கொள்ளுப்பிட்டியிலும், வடக்கில் மயிலிட்டியிலும் தகர்த்தெறியப்பட்டு காணாமல் போன ஆலய விவரங்களும் எம்மிடம் உண்டு. இவற்றை சிங்கள மக்கள் செய்வதில்லை. ஏனெனில் இந்த ஆலயங்களில் அவர்களும் வந்து வணங்குகிறார்கள்.

இவற்றை யார் செய்வது என்பது ஒரு பகிரங்க இரகசியம். எங்கள் எதிரணி கன்னி பிரசார கூட்டம் இம்முறை கண்டியில் நடந்தது. கடந்த 2010ஆம் வருட ஜனாதிபதி தேர்தல் கூட்டமும் இங்குதான் நடந்தது. கடந்த முறையை விட இம்முறை இரண்டு மடங்கு கூட்டம் வந்ததை நான் என் சொந்த கண்களால் பார்த்தேன்.

நாங்கள் ஒரு பஸ்ஸில் கூட ஆட்களை ஏற்றி வரவில்லை. அது கூட்டப்பட்ட கூட்டம் அல்ல. தானாக கூடிய கூட்டம். அரசு கட்சியின் கன்னிக்கூட்டம் அனுராதபுரத்தில் நடைபெற்றபோது, சுமார் 900 இ.போ.ச. பஸ்களில் கூட்டம் கூட்டி வரப்பட்டது.

அனுராதபுர மாவட்டம் வடமாகாணம் வரை நீண்டு விட்டதோ தெரியவில்லை. வடக்கில் இருந்து மாத்திரம் 110 பஸ்களில் ஆள்களை ஏற்றி வந்து கூட்டம் காட்டி உள்ளார்கள்.

அதற்காக அங்கும் சாரதி, நடத்துநர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டன. ஆட்களை கூட்டி வந்து கூட்டம் காட்டும் அளவுக்கு அரசின் செல்வாக்கு விழுந்து கிடக்கிறது. இதனால் இனவாதத்தை கிளப்பி ஓட்டு வாங்க முயற்சிக்கின்றீர்கள்.

இன்று தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் தனிநாடு என்ற நோக்கம் இல்லை என்று கூட்டமைப்பின் தலைவரே திரும்ப, திரும்ப சொல்லிவிட்டார். எமது நிகழ்ச்சி நிரலில் இன்று ஆயுதத்திற்கும் இடமில்லை. பின்னர் ஏன் சும்மா பூச்சாண்டி காட்டுகிறீர்கள்? தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு இன்னமும் முடிவு செய்யவே இல்லை. அதற்குள் நீங்கள் புலி சாயம் பூசுகிறீர்கள்.

இந்நாட்டில் தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்கள மக்களுடன் சமத்துவத்துடன் கூடிய ஐக்கியத்துடன் வாழவே விரும்புகிறார்கள். ஆனால், இந்த அரசாங்கம் இதை விரும்பவில்லை.

தமது தேர்தல் தேவைகளுக்காக, இனவாதத்தையும், மதவாதத்தையும் கிளப்பி விட்டு அதில் அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. எங்களுக்கு எதிராக இனவாதம் பேசுகிறீர்கள்.

பிறகு எங்கள் கந்தனுக்கு காவடி தூக்கி, வெங்கடாசலபதிக்கு நமஸ்காரம் செய்கிறீர்கள். என்ன இது? எங்கள் இந்து கடவுள் என்ன, இங்கு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஒரு இந்து அரசியல்வாதி அமைச்சரா?

இந்நாட்டிலே தொடர்ந்து நிகழ்ந்து வரும் இந்த கொடும்போக்குக்கு இனிமேல் நாம் முடிவு கட்டுவோம். உங்கள் அரசியல் கொள்கைகளை மக்கள் முன் வையுங்கள். அவற்றை மக்கள் ஏற்றுகொண்டால் மக்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள். ஏற்காவிட்டால் வாக்கு இல்லை.

இது உங்களுக்கும், எங்களுக்கும் பொதுவான விதி. இதை மாற்றி கொழும்பில் இன, மதவாதத்தை கிளப்பும் நடவடிக்கைகளுக்கு, நாம் இடம் கொடுக்க மாட்டோம்.

கொழும்பு மாவட்டம் எனது பூமி. இங்கே வாழும் நமது மக்களின் வாக்குகளை பெற்றுள்ள தலைமை கட்சி ஜனநாயக மக்கள் முன்னணி.

இங்கே வாழும் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேறு எவருக்கும் யோக்கியதையும், மக்கள் ஆணையும் கிடையாது. எங்கள் முத்திரை இல்லாமல் இங்கே எவருக்கும் எங்கள் மக்கள் வாக்களிக்கவும் மாட்டார்கள்.

எங்களை ஏற்றுக்கொள்ளாத எவரையும் நாமும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம். இங்கே வாழும் எங்கள் மக்களின் நிம்மதிக்கு இரட்டை தட வழியை நான் பின்பற்றுகிறேன்.

ஒரு தடம், எமது இன உரிமை. இன்னொரு தடம், சகோதர இனத்துடன் ஐக்கியம். இந்த இரண்டையும் ஒன்றை, ஒன்று விஞ்சி விடாமல் முன்னெடுக்கும் அனுபவமும், அறிவும் என்னிடம் உண்டு.

அதனால்தான், எம் கட்சியில் சிங்கள, முஸ்லிம் சகோதரர்களும் எம் மீது நம்பிக்கை வைத்து இருக்கின்றார்கள். இங்கே இன, மத, குல வாதங்களை கிளப்பி, எங்கள் நிம்மதியை கெடுக்கும் எந்த சேட்டைகளுக்கும் நான் ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டேன். - என்றார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►