blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, November 21, 2014

சவுதி சென்று, காயங்களுடன் நாடு திரும்பிய பெண் மரணம்!

வேலைவாய்ப்புக்காக சவுதி சென்று, காயங்களுடன் நாடு திரும்பிய, ஹட்டன் - வெலிங்டன் டிவிசன் யூனிபீல்ட் தோட்டதைச் சேர்ந்த முன்று பிள்ளைகளின் தாயான கமலேஸ்வரி (வயது 46) உயிரிழந்துள்ளார்.

தமது குடும்ப சூழ்நிலை காரணமாக குருணாகல் - தம்புள்ள வீதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம், கடந்த 2012 ஆண்டு 4 மாதம் 27 திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக இவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். 

இவரின் கணவர் குருநாகல் பகுதியில் உள்ள கடை ஒன்றில் கூலி வேலை செய்து வருகின்றவர்.

மனைவி சவூதிக்குச் சென்று இரண்டு மாதங்கள் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.

அதன் பின் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனவும், பல இடங்களுக்கு சென்று மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்ததாகவும் அது பயனலிக்கவில்லை எனவும் கணவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் 2013.12.28 அன்று திடீரென "கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வாருங்கள் உங்களின் மனைவி இலங்கைக்கு வந்து விட்டார்" என சவூதியில் அவருடன் ஒன்றாக வேலை செய்த பெண் ஒருவர் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

அதன் பின் கணவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற போது, கமலேஸ்வரி கழுத்தில் பாரிய காயங்களுடன் பேச முடியாத நிலையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து கணவர் கமலேஸ்வரியை குருநாகல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

ஒரு வருடமாக கண்டி, பேராதெனிய போன்ற வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றதோடு கடந்த வாரம் வெலிங்டன் தோட்டத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

கடந்த 18.11.2014 அன்று தனக்கு முடியாத நிலையில் வெளியில் எழுந்து சென்ற போது தவறி விழுந்ததோடு தனது குடும்பத்தாரால் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவர் பணி புரிந்ததற்கான சம்பளப் பணம் எதுவும் இதுவரையும் வழங்கவில்லை என இவரின் கணவர் சுட்டிக்காட்டினார். இவரின் இறப்புக்கு வெளிநாட்டில் ஏற்பட்ட பிரச்சினை தான் காரணம் என இவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

வெளிநாட்டில் பணிப்புரிந்த இடத்தில் கழுத்திலும், தலையிலும் அடித்துள்ளதாக கமலேஸ்வரி தனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததாக கணவனாகிய சின்னையா கூறினார்.

அத்தோடு இவரை இலங்கைக்கு வரவழைப்பதற்கு 38,000 ரூபா பணத்தையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செலுத்திருப்பதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள். 

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு நஷ்டஈடு வழங்குவதற்கு முன்வரவேண்டும் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஹட்டன் திடீர் மரண விசாரணை அதிகாரி ஜே.எம்.பசீர் கருத்து தெரிவிக்கையில்...

"வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் போது கழுத்தில் பாரிய காயங்களுடன் இருந்துள்ளதுடன் அவரால் பேச முடியாத நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதன்பின் குருநாகல் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்ததன் பின் கீழே விழுந்ததனால் தலைப்பகுதியில் அடிப்பட்டுள்ளது. உடனடியாக இவரின் உறவினர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு இவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►