நாட்டின் அதி உன்னத நிர்வாக பீடமாகக் கருதப்படும் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 94 உறுப்பினர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாதவர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார். அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
நாடாளுமன்றில் 225 பேர் அங்கம் வகிக்கின்றோம். இதில் 94 பேர் கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் சித்தியெய்தாதவர்களாக இருக்கின்றார்கள்.
மேலும் 142 பேர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தாதவர்களாக இருக்கின்றார்கள்.
சாதாரண தரம், உயர்தரம் ஆகியன ஒருவரின் புத்தி கூர்மையை மதிப்பீடு செய்யும் ஒரே அளவுகோல் அல்ல என்ற போதிலும், யதார்த்தத்தில் உயர்தர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்களே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தீர்மானங்களை எடுக்கின்றார்கள்.
இன்று முகநூல் ஒரு முக்கியமான தொடர்பாடல் சாதனமாக மாற்றமடைந்துள்ளது.
இதில் இலங்கை அரசியல்வாதிகள் தொடர்பில் வெளியாகும் கருத்துக்களே அவர்களது தகைமைகள் குறித்து அறிந்து கொள்ளப் போதுமானது. அரசியல்வாதி என்றாலே கொள்ளை, கொலை, பாலியல் வன்முறைகளில் ஈடுபடுபவர் என்ற பிழையான நிலைப்பாடு மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். நீலம், சிவப்பு நிற அரசாங்கங்களுக்கு பதிலாக பச்சை அரசாங்கமொன்று வந்தாலும் இந்த நிலைமையை மாற்ற முடியாது.
ஏனெனில், பச்சை அரசாங்கம் வந்தாலும் மோசமான அரசியல்வாதிகள் இதில் வந்து இணைந்து கொள்வார்கள் - என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply