ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் மேற்குலக நாடுகளின் செயற்பாடுகளுக்கு சார்பாக தென் ஆபிரிக்காவின் செயற்பாடுகளும் இடம்பெற்றால் அதற்குத் தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷாவை இன்று (08) யாழ்ப்பாணத்தில் சந்தித்த போதே முதலமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள தென் ஆபிரிக்காவின் உப ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களை, முன்னுதாரணமாகக் கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்ட தென் ஆபிரிக்க உப ஜனாதிபதி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்க வேண்டியது சட்டத்திற்கு உட்பட்டது என தான் தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
தென் ஆபிரிக்க உப ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவூட்டிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது;
"இந்தியா எங்களது பிரச்சினைகள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றது. ஜெனிவாவிலே யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. மேற்குலக நாடுகள் பல எங்களுக்குச் சார்பாக பல விதத்திலும் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த நடவடிக்கைகளுக்குச் சார்பாக உங்கள் நடவடிக்கைகள் அமைந்தால் அதை நாங்கள் வரவேற்கின்றோம் என்று கூறினோம். நிச்சயமாக அது சார்பாகத்தான் இருக்கும், அதற்கு முரண்பட்ட விதத்தில் நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம் என்று அவர் ஓர் உறுதிமொழி அளித்ததை நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்." என்றார்.வட மாகாணத்திற்கான அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சிறில் ரமபோஷாவிற்கு எடுத்துக் கூறியதாக முதலமைச்சர் மேலும் கூறினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தென் ஆபிரிக்க உப ஜனாதிபதி சிறில் ரமபோஷா, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply