அவுஸ்திரேலிய
அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள இரண்டு கடற்படை ரோந்துப்
படகுகள் இலங்கை கடற்படையுடன் இன்று இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்புத் துறைமுகத்தில் இன்று காலை நடைபெற்ற வைபவத்தின்போதே இந்த ரோந்துப் படகுகள் உத்தியோகபூர்வமாக கடற்படையுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன.
இந்த வைபவத்தில் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசனும் கலந்துகொண்டிருந்தார்.
வைபத்தின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் ஆகியோரிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைக்கு இரண்டு ரோந்துப் படகுகளை அன்பளிப்பாக வழங்கியமை மற்றும் சர்வதேச செயற்பாடுகளின்போது இலங்கைக்கு வழங்கிவருகின்ற தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்காக இதன்போது ஜனாதிபதி அவுஸ்திரேலியாவுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.
மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
உள்நாட்டிலேயே ஏற்படுத்திக் கொள்ளப்படும் அரசியல் பொறிமுறைகள் மிகச்சிறந்த முறையில் தொழிற்படும் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் கடல் பயணங்களை தடுப்பதற்காக அவுஸ்திரேலிய அதிகாரிகளும், இலங்கை பொலிஸார் மற்றும் கடற்படையினர் எதிர்காலத்தில் மேலும் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதன் அவசியம் குறித்தும் ஸ்கொட் மொரிசன் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply