blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, July 16, 2014

"தப்பித்தவறி கூட ஒரு விவசாயி ஆகிவிடாதே!" - மகனிடம் கூறிவிட்டு தற்கொலை!


போதிய மழையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நொடித்துப்போன தெலங்கானா விவசாயி ஒருவர், "தப்பித்தவறி கூட ஒரு விவசாயி ஆகிவிடாதே!" என பள்ளியில் படிக்கும் தனது மகனிடம் கூறிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலங்கானா விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தெலுங்கானா மாநிலம் மெடக் மாவட்டம் ராயாவராம் கிராமத்தை சேர்ந்த சிறுவன் வமிஷி. 7 வயது சிறுவனான இவனது தந்தை ஒரு விவசாயி. போதிய மழையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயத்தில் நொடித்துப் போனார்.

இதனால் கடன் சுமையும் ஏறியது. குடும்ப செலவுகளை சமாளிக்க திணறினார். கடன்கொடுத்தவர்கள் கடனை கேட்டு நெருக்கினார்கள். இதனால் மிகவும் மனமுடைந்து போனார்.

இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன் இவர், தனது மகன் வமிஷி பயிலும் பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவனை வகுப்பிலிருந்து டீ கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவனுக்கு ஒரு பன்னும்,டீயும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதனை அவன் சாப்பிடுவதை பாசமுடன் பார்த்தபடியே தலையை வருடி கொடுத்துள்ளார். அதன் பின்னர் அவனிடம் 5 ரூபாயை கொடுத்துவிட்டு நன்றாக படிக்குமாறு அறிவுறுத்திவிட்டு, "தப்பித்தவறி கூட என்னைப்போல ஒரு விவசாயியாக மட்டும் ஆகிவிடாதே!" என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

தந்தை அவ்வாறு கூறுவதை கேட்ட சிறுவனும், தந்தையின் சோகம் தவழும் முகத்தை பரிதாபமாக பார்த்தபடியே தலையை பலமாக ஆட்டியுள்ளான்.

பின்னர் அவனை மீண்டும் பள்ளியில் கொண்டுவிட சென்று உள்ளார்.

அப்போது பள்ளியின் கேட் அருகே வம்ஷியின் வகுப்பாசிரியரை பார்த்த அவர், தனது மகன் எவ்வாறு படிக்கிறான் எனக் கேட்டுவிட்டு, தனது மகனுக்கு நன்றாக பாடம் சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுவிட்டு, தனது மகனை நோக்கி கையை ஆட்டி விடைகொடுத்துவிட்டு வீடு திரும்பி உள்ளார்.

வீடு திரும்பிய அடுத்த அரை மணி நேரத்திலேயே, வம்ஷியின் தந்தை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளிக்கு தகவல் வந்துள்ளது. இது ஒரு சோக நிகழ்வு என்றால், ராயாவராத்திற்கு அடுத்துள்ள ஊரான திம்மிக்கபள்ளி என்ற இடத்திலும் விவசாயிகள் இதே போன்ற பிரச்னைகளில்தான் சிக்கி தவிக்கின்றனர்.

இக்கிராமத்தை சேர்ந்த லக்‌ஷ்மி என்பவரின் கணவரும் ஒரு விவசாயிதான். விவசாயம் நொடித்துப்போனதில் கடன் தொல்லை தாளாமல் கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.

இத்தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகளில் மூத்த பிள்ளையான ராமுலுவை ஹைதராபாத்திற்கு வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டார். இளைய மகன் ரவி மட்டுமே தாயுடன் உள்ளான். தனது மூத்த மகன் தங்களுடன் இல்லாத சோகம் லக்ஷ்மிக்கு உள்ளது.

ஆனாலும் தனது மகன் ஹைதராபாத்திற்கு சென்றதால் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார். எனது மகனை பல மாதங்களாக பார்க்க முடியவில்லை என்றாலும், ஏதோ சிறிது நிம்மதியாக உள்ளேன் என்று கூறுகிறார்.

இளைய மகன் ரவி கூறுகையில் நானும் இங்கிருந்து செல்வதேயே விரும்புகிறேன். ஆனால் இப்போதை சூழ்நிலையில் என்னால் அவ்வாறு செல்ல முடியவில்லை. ஏனென்றால் எங்களது குடும்பம் மிகவும் அதிக தொகையை கடனாக செலுத்த வேண்டியதுள்ளது.

நாங்கள் என்ன சம்பாதித்தாலும் அது கடனுக்கே சரியாகிவிடுகிறது. நாளுக்கு நாள் கடன் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை" என்கிறார். அப்பகுதியை சேர்ந்த மற்ற விவசாயிகளிடமும் இதே வேதனைத்தான் காணப்படுகிறது.

நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) விவசாயம் மற்றும் அதனை சார்ந்த துறைகளின் பங்கு 15.2%ல் இருந்து 13.9 % ஆக சரிந்துள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட பொருளாதார சர்வே தெரிவிக்கிறது.
ஆனாலும் இன்னமும் விவசாயத்துறையில் நாட்டில் 55 சதவீத மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இருப்பினும் விவசாயம் ஒரு ஸ்திரமற்ற வாழ்வாதாரமாக மாறிவிட்டது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2001-2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 90 லட்சம் மக்கள் விவசாயத்தை கைவிட்டுவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யாம் மற்றும் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த மக்கள் ஹைதராபாத்திற்கு இடம் பெர்ந்துவிட்டனர்.

இது குறித்து தெலங்கானா மாநிலம் ராயாவராம் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "எந்த பெற்றோரும் தனது குழந்தை விவசாயி ஆவதை விரும்புவதில்லை. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஒரு தொழிலாளி அதிக வருமானம் பெருகிறார். அதேசமயம் விவசாயி கடனாளியாக உள்ளார். இத்தகைய சூழ்நிலை நிலவினால் வருங்காலத்தில் இந்தியா உணவு பற்றாக்குறை பிரச்னையை சந்திக்க நேரிடும்.” என எச்சரித்தார்.

மத்திய, மாநில அரசுகள் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!

நன்றி: விகடன்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►