ஈஃபிள் கோபுரத்தை விடவும் 35 மீட்டர்கள் உயரமான ரயில்வே பாலத்தை இமயமலையில் கட்டி வருகிறார்கள் இந்திய பொறியியலாளர்கள்.உலகின் தற்போதைய மிக உயரமான ரயில் பாலமாக விளங்குவது சீனாவின் பிபாஞ்சியாங் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில் பாலமாகும்.
இந்நிலையில் இமாலய சிகரத்தையும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளையும், குறிப்பாக பாராமுல்லா பகுதியை இணைக்கும் வகையில் செனாப் நதி மீதே இந்த ரயில் பாலம் கட்டப்பட்டு வருகின்றது.
இரும்பு கட்டுமானங்களை கொண்டு கட்டப்படும் “ஆர்ச்” வடிவிலான இந்த பாலத்தை, கட்டி முடிப்பதற்கான பணி,கொங்கன் ரயில்வே கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான செலவு மதிப்பீடு 92 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாலத்திற்கான பணிகள், அங்கு வீசிய கடுமையான காற்று உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, பாதுகாப்பு அம்சங்களை கருத்தில்கொண்டு நிறுத்தப்பட்டன. பின்னர் 2008 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் அது பொறியியல் துறையின் ஒரு அற்புதமான படைப்பாக அமையும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் 2016 டிசம்பருக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
359 மீட்டர்கள் ( 1,177 அடி ) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இந்த ரயில் பாலம், கட்டி முடிக்கப்பட்டுவிட்டால் அது தற்போதைய உலகின் உயரமான சீனா பாலத்தைவிட ( 275 மீட்டர் உயரம்) அதிக உயரமானதாக திகழும்.
No comments:
Post a Comment
Leave A Reply