நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் இனவாதச் செயற்போக்கு அவரது அமைச்சர் பதவிக்கு இழுக்கானதாகும். எனவே அவர் அமைச்சர் பதவியைத் துறக்க வேண்டும். - இவ்வாறு கோரியிருக்கின்றது இலங்கை பௌத்த மத பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடம். தங்களுக்கு மாறாகச் செயற்பட்டுவரும் மேற்குலகுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் பெரும் போராட்டம் நடத்தி வரும் இந்த வேளையில், அமைச்சர் ஹக்கீம் மேற்குலகினதும் ஐ.நாவினதும் பிரதிநிதிகளுக்குப் பின்னால் போய், தவறான குற்றச்சாட்டுக்களை அடுக்கி, அதற்கு சர்வதேச கவனிப்பை வழங்கி அதன் மூலம் அத்தரப்புக்களின் இலங்கை எதிரப்புப் போக்குக்கு ஒத்துழைத்து, உதவியும் வருகிறார்.
அளுத்கமவிலும் பேருவளையிலும் அண்மையில் இடம்பெற்ற துன்பியல் சம்பவங்களை தமது சந்தர்ப்பவாத அரசியலுக்கு அவர் வசமாகப் பயன்படுத்துகின்றார் என்றும் அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.
"ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியின் போக்கில் இருந்து அவர் விலகிச் செல்கின்றார். மேற்குலக சக்திகளின் எதிர்பார்ப்புக்களையும், விருப்புக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் அவர் செயற்படுகின்றார் என்பது தெளிவு. நாட்டுக்கு அபகீர்த்தி மற்றும் அழிவை ஏற்படுத்தும் அவரது போக்கை முஸ்லிம்கள் கூட அங்கீகரிக்க மாட்டார்கள். அவர் நெருப்புக்கு மேலும் எரியூட்டுகின்றார்." - என்று அஸ்கிரிய பீடத்தின் குழு உறுப்பினர் வண. மெதகம தம்மானந்த தேரர் சொன்னார்.
எல்லா சமூகத்தையும் சமமாக மதிக்க வேண்டிய ஹக்கீம், அதைவிடுத்து, தனது பக்கச்சார்பான போக்கு மூலம் பிற்போக்குச் சக்திகளின் பக்கம் சாய்கின்றார் என்றும் தேரர் குற்றம் சுமத்தினார்.
No comments:
Post a Comment
Leave A Reply