blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, June 8, 2014

இலங்கையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உதவுமாறு பாரதப் பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை


இலங்கையில் கைதாகியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உதவுமாறு பாரதப் பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கைஇலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வினை பெற்றுத்தருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றிரவும் இன்று அதிகாலையும் தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புக்களில் தமிழக மீனவர்கள் 82 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து ஜெயலலிதா ஜெயராம் இந்தியப் பிரதமருக்கு இன்று கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கச்சதீவை மீண்டும் இந்தியா பொறுப்பேதன் மூலமும், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஊடாகவும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும் என தமிழக முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் 77 சந்தர்ப்பங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா ஜெயராம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் மீனவர்கள்  பணி பகிஷ்கரிப்பு

இதேவேளை, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராமேஸ்வரம் மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்களும் அவர்களது ஒன்பது படகுகளுடன் கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பீ.எஸ் மிரண்டா தெரிவித்தார்.

அத்தோடு படகு பழுதடைந்ததால் கடலில் நிர்க்கதியாகியிருந்த ஐந்து மீனவர்களும் கடற்படையினரால் அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 36 பேர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார்.
அவர்களது 10 படகுகளும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஜெகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்றொழில் அமைச்சின் அறிவித்தல்

இதேவேளை, இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுகின்ற இந்திய மீனவர்களை சட்ட நடவடிக்கைகளின் பின்னர் துரிதமாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நற்புறவை மேம்படுத்துவம் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி டி.எம்.ஆர்.பி.திசாநாயக்க கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை உடனடியாக மீண்டும் அவர்களிடம் கையளிக்கும் எண்ணம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைவே மேற்கொள்ளப்படுவதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை துரிதமாக விடுதலை செய்யுமாறு அந்நாட்டு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கம் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக மீனவர்களை விடுவிப்பது மற்றும் மீனவர்களின் எல்லை மீறுவதை தடுப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அந்த சங்க மாவட்ட செயலாளர் பீ.ஜேசுராஜ் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►