சம்பூர் பகுதிக்கு சனிக்கிழமை சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட குழுவினர் மணல் சேனை, பட்டிக்குடியிருப்பு ஆகிய முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது சம்பூர் மக்கள் 4 அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் கடும் வெயிலின் மத்தியில் தகரங்களுக்கு கீழே இருப்பதால் அந்த முகாமிலுள்ள பலருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது. அங்கு குடியிருக்க முடியாமல் மக்கள் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.
சம்பூர் அகதி முகாம்களிலுள்ள பலர் நோய்களுக்கு உள்ளாகி மூதூர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். "எங்களுக்கு எந்தவொரு உதவியும் வேண்டாம். எங்களை எமது சொந்த இடங்களில் குடியேற அனுமதித்தால் எங்களுடைய அரை வாசி நோய் குறைந்து விடும்' என்று மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.
700 குடும்பங்களைச் சேர்ந்த 3,000 பேர் வரையில் இந்த அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த முகாம்களுக்கு எந்த வொரு அரசசார்பற்ற நிறுவனமும் உதவி செய்வதற்குச் செல்ல முடியாது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவவோ, பாடசாலை செல்லும் மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் வழங்கவோ முடியாத நிலை உள்ளது. அங்குள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்க வந்த நிறுவனம் ஒன்றை இராணுவம் அதற்கு அனுமதி வழங்க மறுத்துத் திருப்பி அனுப்பியுள்ளது. 12 கிலோமீற்றர் தூரம் சைக்கிளில் சென்று மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டியுள்ளது. எனவே சம்பூர் மக்களின் சொந்த நிலத்தை அவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
No comments:
Post a Comment
Leave A Reply