பூநகரிப் பிரதேசத்தில் கெளதாரிமுனைக் கிராமத்தில் அதிகாரிகளின் அனுமதியின்றி ஆழமாக மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுவதால் அந்தப் பகுதியிலுள்ள குடிதண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாறும் அபாயம் தோன்றியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள பூநகரி பிரதேச சபைத் தவிசாளர் இந்த விடயம் குறித்து விரைவாக உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கோரியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரிப் பிரதேசத்தில் கெளதாரி முனைக் கிராமத்திலுள்ள பல காணிகள் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானவையாகும். தற்போது யாழ்.மாவட்டத்தில் கட்டட அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்து இடம் பெறுவதால் மணலுக்குத் தட்டுப்பாடும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தக் காணிகளில் மலை போல் குவிந்திருக்கும் மணல் தினமும் 50 இற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் யாழ்.மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடல் மட்டத்திலும் பார்க்க மிக ஆழமாக மணல் அகழப்படுவதால் அந்தப் பகுதியிலுள்ள குடிதண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாறும் அபாயம் தோன்றியுள்ளது. கடந்த காலங்களில் குறித்த கிணறுகளிலிருந்து வாடியடிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பவுசர் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
தூரத்தைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குடிதண்ணீருக்குத் தேவை ஏற்படும் போது இந்தக் கிணறுகளை நாட வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் கூறியதுடன் இந்த நிலை தொடருமானால் கெளதாரி முனை மக்களுக்கு வேறு இடங்களிலிருந்து குடிதண்ணீர் வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply