இனம்,
மதம், குலம் என்ற பிரிவினைகள் அர்த்தமற்றவை என புத்த பெருமானின் போதனைகள்
உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மனிதனின் அந்தஸ்து, அவனது நன்னடத்தை மற்றும் தீய நடத்தைகளின் ஊடாகவே கணிப்பிடப்படுவதாக புத்த பெருமானின் போதனைகள் தெளிவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
புத்தரின் போதனைகளின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு பண்பாடான சமூகம் என்றவகையில் உலக நாடுகளுக்கு மத்தியில் இலங்கை தலை நிமிர்ந்து நிற்பதாகவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெறுப்பும் குரோதமும் கவலைக்குரியதாகும் எனவும், அன்பும் கருணையும் மட்டுமே மன நிறைவுக்கான வழி எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் அரசாங்கக் கொள்கை அனைவரினதும் சுதந்திரத்தையும் கௌரவத்தையும், பாதுகாப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
100 வருடங்கள் வாழ்வதை விட, இன்றைய நாள் பெறுமதியானது என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, வெசாக் காலத்தில் உலகிற்கு அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள அனைவரும் தாமதமின்றி செயற்பட முயற்சிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புத்தபெருமானின் போதனையின் பிரகாரம் சமூகம் செயற்படுகின்றதா என்பதை அறிந்து கொள்வதற்கு சிறந்தவொரு காலப்பகுதியாக வெசாக் காலம் விளங்குவதாக வெசாக் பண்டிகையை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்த பெருமானின் தர்ம போதனைகளை பின்பற்றுபவர்களாயின், அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த தர்மத்திற்கு அமைய வாழ்வதே வெசாக் பண்டிகையின் உண்மையான அர்த்தமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply