இலங்கையின் கிழக்கே அம்பாறை ஒலுவில் கேசங்கேணி
கிராமத்தில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படவிருப்பதால் அங்கிருந்து
வெளியேற்றப்படவுள்ள மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கை
எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் நாட்டின் உச்சநீதிமன்றத்துக்கு
உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளது.
கேசங்கேணி மக்கள் தாக்கல் செய்த மனு சம்பந்தமாக
அரசாங்கம் உச்சநீதிமன்றத்துக்கு எழுத்து மூலமாக பதில் வழங்கிய நேரத்தில்
சட்ட மா அதிபர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இராணுவ முகாம் ஒன்று
அமைக்கப்படவுள்ளதால் கிராமங்களை விட்டு வெளியேறச்சொல்லி 2011ல் தமது
ஊருக்கு வந்த இராணுவத்தினர் உத்தரவிட்டதாக மனுதாரர்கள் நீதிமன்றத்தில்
தெரிவித்திருந்தனர். சம்பந்தப்பட்ட இடங்களில் மனுதாரர்கள் சட்ட
அனுமதியின்றி வாழ்ந்துவருவதால் அந்த இடங்களைக் கையகப்படுத்த இராணுவத்துக்கு
உரிமை உள்ளது என அரசு தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.
ஆனாலும் வெளியேற்றப்படும் மக்களுக்கு மாற்று காணிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என சட்ட மா அதிபர் உறுதி வழங்கியுள்ளார்.
அவ்வாறு அரசாங்கம் வழங்குகின்ற மாற்றுக்காணிகளை
பெற்றுக்கொள்ள மனுதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பு பதிலை ஆராய்வதற்காக இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 23 தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply