1994ஆம் ஆண்டு ஒரு நூறு நாள் காலகட்டத்தில் ருவாண்டாவில் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெரும்பான்மையாக துத்ஸி இனத்தார்; கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையாக ஹூட்டு இனத்தார்.
ருவாண்டாவின் அப்போதைய ஜனத்தொகையில்
85% சதவீதம் பேர் ஹூட்டு இனத்தார் என்றாலும், அங்கு சிறுபான்மையாக
வாழ்ந்துவந்த துத்ஸி இனத்தாரின் கை மேலோங்கியிருந்தது.
1959ல் ருவாண்டாவின் துத்ஸி மன்னராட்சி முறையை ஒழித்துவிட்டு ஹூட்டூக்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர்.
துத்ஸி இனத்தார் யுகாண்டாவுக்கும் பிற அண்டை நாடுகளுக்கும் வெளியேறினர்.
அவர்கள் ஆர் பி எஃப் அதாவது ருவாண்டா தேசப்பற்று முன்னணி என்ற கிளர்ச்சிக் குழு ஒன்றை அமைத்து ருவாண்டாவுடன் சண்டையிட்டு வந்தனர்.
1990ல் அந்நாட்டின் மீது படையெடுத்தனர். 1993ல் ருவாண்டாவுக்கும் இவர்களுக்கிடையே சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டிருந்தது.
வெறியாட்டம்
ஆனால் 1994 ஏப்ரல் 6ஆம் தேதி ருவாண்டாவின் அதிபரான
ஹூட்டூ இனத்தைச் சேர்ந்த ஹப்யாரிமனா சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட
ஹூட்டூ கடும்போக்காளர்கள், துத்ஸி இனத்தாரை ஒட்டுமொத்தமாக அழித்துவிட
வேண்டும் எனத் திட்டமிட்டு கொலைவெறியாட்டத்தில் இறங்கினர்.
ருவாண்டா அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் யார் யார்
என்று கவனமாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் எல்லாம் திட்டமிட்டு
குடும்பத்தோடு கொன்று குவிக்கப்பட்டனர். துத்ஸி இனத்தவரை அவரது அண்டை
வீட்டில் வாழ்ந்த ஹூட்டூ இனத்தவரே கொன்ற அவலமும், துத்ஸி மனைவியை அவருடைய
ஹூட்டூ கணவனே கொன்றது போன்ற கொடூரங்களும் அப்போது அரங்கேறின.
கொலைகளைத் தாண்டி துத்ஸி இனப் பெண்கள் ஆயிரக்கணக்கானோர், பிடித்துச் செல்லப்பட்டு பாலியல் அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர்.
தடுக்கமுடியவில்லை
அந்த நேரத்தில் ஐநா அமைதிகாப்பு படைகளும் மற்றும்
பெல்ஜியம் படைகளும் அவ்விடத்தில் இருந்தாலும், இந்த கொலைகளை தடுக்க வேண்டிய
உத்தரவு அவர்களுக்கு சென்றிருக்கவில்லை.
ஹூட்டூ அரசாங்கத்துக்கு நெருக்கமாக இருந்த பிரஞ்சு
அரசாங்கம் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைத்தாலும் அதுவும் கொலைகளைத் தடுக்க
போதிய முயற்சி எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸுமேகூட கொலைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாக ருவாண்டாவின் தற்போதைய அதிபர் குற்றம்சாட்டுகிறார்; ஆனால் பிரான்ஸ் அதனை மறுக்கிறது.
பின்னர் துத்ஸி இன கிளர்ட்ச்சிக் குழுவினர் வலுவாக அணிதிரண்டு ஹூட்டுக்களை ருவாண்டாவை விட்டு விரட்டி ஆட்சியைக் கைப்பற்றினர்.
ஹூட்டூக்கள் ஆயிரக்கணக்கானோரை அப்போது துத்ஸி கிளர்ச்சிக்காரர்கள் கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.
வன்முறைக்குப் பின்னால்...
கொலைவெறியாட்டம் முடிந்து அமைதி திரும்பிய பின்னர்
ருவாண்டாவில் ஆர் பி எஃப் கிளர்ச்சிப் படையின் தலைவர் பால் கிகாமே அதிபராக
வந்து, பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்றியுள்ளார்.
வறுமையின் பிடியிலிருந்து இந்த குட்டி நாடு வேகமாக
வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் ருவாண்டாவின் பொருளாதாரம்
சராசரியாக ஒன்பது புள்ளிகள் என்ற அளவில் வளர்ந்துள்ளது. இது சீனாவின்
பொருளாதார வளர்ச்சிக்கு நிகரான ஒரு வளர்ச்சி ஆகும்.
இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீதான சட்ட
நடவடிக்கை என்று எடுத்துக்கொண்டால், இருபது லட்சம் பேருக்கு எதிராக உள்ளூர்
நீதிமன்றங்களிலும், கொலைவெறிக் கும்பல்களின் தலைவர்கள் என்று அடையாளம்
காணப்பட்டவர்கள் மீது அண்டையிலுள்ள தான்ஸானியாவிலும் வழக்கு விசாரணை
நடந்துள்ளது.
ருவாண்டாவில் தற்போது எவருமே இனம் பற்றி பேச சட்ட ரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனம் பற்றி பேசினால் அது நிஜமான நல்லிணக்கம் உருவாவதற்கு தடையாகவே இருப்பதாக அரசாங்கம் வாதிடுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply