வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்வி அபிவிருத்தி மாநாட்டுக்கு, அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என்று ஆளுநர் அறிவுறுத்தியிருக்கிறார் என்று கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,
பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்காமல் தவிர்த்த அமைச்சர் த.குருகுலராஜா, அந்த மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் கலந்துகொள்வதை மட்டும் எப்படி அனுமதித்தார்? இவ்வாறு கேட்டுக் கொந்தளிக்கின்றனர் வடமாகாண சபை உறுப்பினர்கள் பலர்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடக்கும் கல்வி ஆலோசனைக் செயலமர்வு நேற்று ஆரம்பமானது. கோண்டாவிலிலுள்ள தனியாக மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாடு இன்றும் தொடர்ந்து நடக்கிறது. குறித்த மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்கு மாகாண கல்வி அமைச்சே மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மாநாட்டை தனித்து மாகாணக் கல்வி அமைச்சு திட்டமிட்டு நடத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆளுநரினதும் கொழும்பு கல்வி அமைச்சினதும் தலையீடுகளும் நெறிப்படுத்தல்களும் அதில் அதிகம் இருந்தன. மாநாட்டிற்கு முதலமைச்சரையும் கல்வி அமைச்சரையும் தவிர வேறு எவரையும் அழைக்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.
இது தொடர்பில் வடக்கு மாகாண சபையின் கல்விக்குழு உறுப்பினர்களின் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டது. குறித்த கூட்டத்தில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை அழைக்க முடியாது என்று வடக்கு ஆளுநர் தனக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என்று கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தமக்குத் தெரிவித்திருந்தார் என்று மாகாண சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
வடக்கு முதலமைச்சர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் மாத்திரமே குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வர் என்றும் அதனைவிட வேறு அரசியல்வாதிகள் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும் குறித்த கூட்டத்தில் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தாராம். ஆனாலும் நேற்று இடம்பெற்ற செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கொழும்பு அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் கலந்து கொண்டார்.
அரசியல்வாதிகள் கலந்துகொள்ளக்கூடாது என்ற அறிவுறுத்தலைப் புறந்தள்ளிக் கல்வி அமைச்சர் அவரை மட்டும் எப்படி மாநாட்டில் பங்கேற்க அனுமதித்தார் என்று இப்போது குமுறுகின்றனர் வடமாகாண சபை உறுப்பினர்கள். சந்திரகுமார் அரசியல்வாதியில்லையா என்றும் அவர்கள் கேள்விழுயெப்புகின்றனர்
No comments:
Post a Comment
Leave A Reply