கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில் கைதடி கிழக்கில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:
கைதடிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது புதிய வீட்டுக்கு வர்ணம் பூசவென அந்தப் பகுதியிலுள்ள ஒப்பந்தகாரர் ஒருவருடன் தொடர்பு கொண்டார். அதை அடுத்து அவரும் தனது வேலையாள்கள் நால்வரை அனுப்பி வர்ணம் பூசும் வேலையைத் தொடக்கியிருந்தார்.வீட்டுக்காரரும் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்ற காரணத்தினால் வீட்டிலுள்ள பொருள்களை அப்புறப்படுத்தாது நம்பிக்கையின் பேரில் வேலைகளை மேற்கொள்ள அனுமதித்திருந்தார். இவ்வாறான நிலையில் நெல் மூடைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைப் பெட்டியில் இருந்த நகைகளில் மூன்று பவுண் நிறை கொண்ட சங்கிலி திருட்டுப் போய்விட்டது.
"பெயின்ற் அடிக்கும்' வேலைகள் நடந்து கொண்டிருந்த இரண்டாம் நாளில் வீட்டிலுள்ள பெண்மணி கொண்டாட்டம் ஒன்றுக்குச் செல்வதற்காக நகைப்பெட்டியை எடுத்துள்ளார். அப்போதுதான் சங்கிலி ஒன்று காணாமல் போனமை தெரியவந்தது. அதிர்ச்சியடைந்தார் அந்தப் பெண். யாரிடம் சொல்வது, யாரைச் சந்தேகிப்பது என்று தெரியாமல் ஏக்கத்தில் தடுமாறினார். பின் ஒருவாறு வீட்டில் சொல்ல வீட்டுக்காரரும் ஒப்பந்தகாரருக்குச் சொல்ல கதை ஒருவழியாக வெளியே வந்தது.
இந்த நிலையில் அந்த வீட்டில் வர்ணம் பூசும் வேலைக்கு ஒப்பந்தகாரரால் நியமிக்கப்பட்டவர்களில் மூன்று இளைஞர்கள் தம்முடன் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட நான்காவது இளைஞர் மீது சந்தேகப்பட்டனர். அவரை எச்சரிக்கும் வகையில் துருவி விசாரித்தனர்.
முதலில் தான் திருடவில்லை என சத்தியம் செய்த அந்த நபர் ஏனையோரின் ஆத்திரத்தைக் கண்டு மிரண்டு சங்கிலியைத் தானே திருடியதாக ஒப்புக்கொண்டு விட்டார். ""நகையை யாழ். நகரில் 15 ஆயிரம் ரூபாவுக்கு அடைவு வைத்து விட்டேன்'' என அவர் கூற ஒப்பந்தகாரரும் உடனடியாக 15 ஆயிரம் ரூபாவை கொடுத்து நகையை மீட்பித்து உரியவரிடம் கையளித்தார்.
நகையைத் திருடிய இளைஞர் சில வருடங்களுக்கு முன்னர் கைதடி சித்த மருத்து வத்துறை விடுதியில் திருடச் சென்றவேளை இராணுவத்தினரால் காலில் சுடப்பட்டு காயமடைந்தவர் என்று கூறப்பட்டது.
No comments:
Post a Comment
Leave A Reply