இலக்கிய வரலாறு என்பது, வாசிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ அல்லது கவனிப்பவர்களுக்கோ பொழுதுபோக்காக, அறிவூட்டத்தக்கதாக அல்லது கல்விப் பெறுமானம் கொண்டதாக அமையும் எழுத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
இது உரை நடை வடிவிலோ கவிதை வடிவிலோ அமையலாம். அத்துடன், இவற்றுள் அடங்கியுள்ளவற்றைப் பயனாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் பயன்படும் இலக்கிய நுட்பங்களின் வளர்ச்சியையும் இது குறிக்கும். எல்லா எழுத்துக்களுமே இலக்கியம் ஆவதில்லை. தரவுகளின் தொகுப்புக்கள் போன்ற எழுத்து வடிவங்கள் இலக்கியமாகக் கணிக்கப்படுவதில்லை.
இலக்கியத்தின் தோற்றம்
இலக்கியம், எழுத்து என்னும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன எனினும் இரண்டும் ஒன்றல்ல. பண்டைச் சுமேரியர்களின் தொடக்ககால எழுத்துக்களோ, பண்டைக்கால எகிப்தியர்
படவெழுத்து முறையில் எழுதியவையோ பழங்காலச் சீனர்களின் பதிவுகளோ இலக்கியம்
என்ற வரையறைக்குள் அடங்கா. எழுத்து மூலமாகப் பதிவு செய்தல் எப்பொழுது
இலக்கியமாக மாறியது என்பது குறித்து அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை.
இலக்கியம் என்பதற்கான வரைவிலக்கணமும் பெருமளவுக்குத் தற்சார்பு உடையதாகவே இருந்து வருகிறது.
பல்வேறு சமுதாயங்களிடையேயான தூரம் அவர்களின் பண்பாடுகள் தனித்தனியாக
வளர்வதற்குக் காரணமாக இருந்தபடியால், இலக்கியமும் உலகின் வெவ்வேறு
பகுதிகளில் ஒரே வேகத்தில் வளரவில்லை. வேண்டுமென்றே அழிக்கப்பட்டதனாலும்,
தற்செயல் நிகழ்வுகளால் அழிந்ததாலும், அவ்விலக்கியங்களை உருவாக்கிய
பண்பாடுகள் முற்றாகவே இல்லாமல் போனதாலும், கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக
எழுந்த இலக்கியங்கள் பல இன்று கிடைப்பதில்லை. இது, முழுமையான உலக இலக்கிய
வரலாற்றை உருவாக்குவதில் உள்ள முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
எடுத்துக்காட்டாக, கிமு முதலாம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியா நூலகம் தீயினால் அழிந்தபோது,
பல முக்கியமான நூல்கள் முற்றுமுழுதாகவே தீக்கு இரையாகிவிட்டதாக
நம்பப்படுகிறது. இது தவிர பல்வேறு சமய சார்பான நிறுவனங்களும், உலகியல்
சார்ந்த நிறுவனங்களும், சில நூல்களையும், நூலாசிரியர்களையும் ஒடுக்கி
விடுவதாலும், பல இலக்கியங்கள் மறைக்கப்பட்டு இலக்கிய வரலாற்றில் தெளிவின்மை
ஏற்படுகிறது.
முன்னோடி இலக்கியங்கள்
இலக்கியத்தின் முன்னோடிகள் என்ற அளவில் சில தொடக்ககால நூல்களை எடுத்துக்காட்டலாம். கிமு 2000 ஆண்டுக்காலத்தைச் சேர்ந்த கில்காமேசு காப்பியம், கிமு 1250 அளவில் எழுதப்பட்ட எகிப்தின் இறந்தோர் நூல்
என்பன இவற்றுள் அடங்குகின்றன. "இறந்தோர் நூல்" கிமு 18 ஆம் நூற்றாண்டளவில்
தோன்றி இருக்கக்கூடும் என்ற கருத்தும் உண்டு. வாசித்தறிய முடியாதிருந்த
பண்டைய எகிப்து மொழியில் எழுதப்பட்டு இருந்ததால், தொடக்ககால ஆய்வுகளில்
பண்டைக்கால எகிப்தின் இலக்கியங்கள் உள்ளடங்கவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் ரொசேத்தாக் கல்லைக் கண்டுபிடித்து பண்டை எகிப்து மொழியை வாசித்தறிந்து மேல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்த பின்னரே எகிப்திய இலக்கியங்களைப் பற்றி அறிய முடிந்தது.
பண்டைக் காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பல நீண்டகாலம் வாய்வழியாகவே
பயிலப்பட்டு வந்துள்ளதும், அவை தோன்றிய காலத்தை அறிந்து கொள்வதில் சிக்கலை
ஏற்படுத்துகிறது. ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு வாய்வழியாகவே கையளிக்கப்பட்டு வந்த, இந்து சமயத்தின் வேதங்களில் ஒன்றான ரிக் வேதம்,
பிற்காலத்திலேயே எழுதப்பட்டது. எனினும், இந்நூலின் முக்கிய பகுதிகள் கிமு
இரண்டாம் ஆயிரவாண்டுக் காலப்பகுதியில் தோன்றியிருக்கலாம் என்று
வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். ஓமர் எழுதிய இலியட், ஒடிசி ஆகிய
இலக்கியங்கள் கிமு 8 ஆம் நூண்டாண்டைச் சேர்ந்தவை. எனினும் இவையும் வெண்கலக் காலத்தின் பிற்பகுதியில் இருந்தே வாய்வழியாகப் பயின்று வந்திருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
தமிழிலும் இன்று அறியவந்துள்ள மிகப் பழைய நூலான தொல்காப்பியம் இலக்கண நூல்
ஆகும். இது கிறித்தவ ஆண்டுகளின் தொடக்கத்துக்குச் சில நூற்றாண்டுகள்
முன்பின்னாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். இலக்கியங்கள் தோன்றி நிலை
பெற்ற பின்பே இலக்கண நூல் தோன்றியிருக்கும் ஆதலால், தமிழிலும்
கிறித்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே இலக்கியங்கள் இருந்திருக்க
வேண்டும். ஆனால், தற்காலத்தில் கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் அனைத்தும்
தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டவையே.
அண்மைக்காலத்தில் தோன்றிய இலக்கிய வடிவங்களின் தோற்றம் குறித்தும்
தெளிவின்மை நிலவுவதைக் காண முடியும். எடுத்துக்காட்டாக, உலகின் முதல் புதின இலக்கியம் எது என்பதிலும் சர்ச்சை நிலவுகின்றது.
பழங்கால இலக்கியங்கள்
சீனா:
இராணுவ உத்திகளைப் பற்றி கூறும் சுன் சூ எழுதிய ‘’போர் கலை’’ புத்தகமே
இக்காலம் வரை அனைவராலும் பயன்படுத்தபடும் பழங்கால சீன இலக்கியம் ஆகும்.
மேலும் கன்பியூசியஸ் மற்றும் லா ஒசி ஆகியோர் நேரடியாகவும், புத்தகங்கள்
மூலமும் மக்களுக்கு முதுமொழிகள் மற்றும் பழமொழிகள் வழங்கினார்.
கிரேக்கம்:
பண்டைய கிரேக்க சமூகம் இலக்கியங்களில் சில குறிப்பிடதக்க வளர்ச்சியை
ஏற்படுத்திய சமூகம் ஆகும். இன்று வரை காவிய கிரேக்க கவிதையான இலியட்
மற்றும் ஒடிஸியே மேற்கத்திய இலக்கியங்கள் தோன்றியதற்கு முன்னோடியாக
கருதப்படுகிறது. போர் மற்றும் சமாதானம், மரியாதை, இழிவு, காதல், வெறுப்பு
ஆகிய அனைத்திற்கும் இவ்விலக்கியம் முன்னோடியாக கருதப்படுகிறது. பிளாட்டோ
மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரின் கருதுக்களும் மிக முக்கிய கிரேக்க
இலக்கியமாக கருதப்படுகின்றது.
லத்தின்:
கிரேக்கத்தைப் போன்றே லத்தினும் மிகப்பழமையான இலக்கிய வரலாற்றைக்
கொண்டது ஆகும். ரோமானியப் பேரரசின் எழுத்தாளர்களே இவ்வகை இலக்கியங்களை
எழுதியவர்கள். பிளாட்டஸ் எழுதிய இருபது நகைச்சுவை நாடகங்களும் இவற்றில்
குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இந்தியா:
இந்தியர்கள் சுருதி மற்றும் சிமிதி ஆகிய வழிகளின் மூலம் தங்களின்
பிள்ளைகளுக்கு தத்துவங்கள் மற்றும் இறையியல் இலக்கியங்களைக்
கற்றுக்கொடுத்து வந்துள்ளனர். சுருதி என்பது வாய்வழிக் கல்வியாகவும்,
சிமிதி என்பது அனுபவ கல்வியாகவும் கருதப்படுகின்றது. வேதங்களும் இது போலவே
கற்கப்பட்டுவந்துள்ளன. இந்தியாவின் புராணக்கதைகளே எழுதப்பட்ட
தத்துவங்களாகக் கருதப்படுகின்றது. இவை அனைத்தும் பழங்கால சமஸ்கிருத
மொழியில் எழுதப்பட்டுள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வழக்கிலிருந்த
மொழியாகும். மேலும் வழக்கொழிந்த மொழியான பாளியில் எழுதப்பட்ட புத்த மதம் சார்ந்த நூல்களும் இந்தியாவின் பழங்கால இலக்கியங்களாகும்.
இடைக்கால இலக்கியங்கள்:
இடைக்கால இலக்கியங்களில் முக்கிய இடங்கள் வகிப்பவை பெருசிய
இலக்கியங்கள், ஒட்டமன் இலக்கியங்கள், அரேபிய இலக்கியங்கள், யூத
இலக்கியங்கள் ஆகியன முக்கிய இடங்கள் வகிக்கின்றன. கிரேக்கம், லத்தின் போல்
அல்
லாமல் இந்தியா, சீனா ஆகிய பழம் இலக்கியங்கள் உருவாகிய நாடுகளிலும்
இலக்கியங்கள் குறிப்பிட்தக்க வளர்ச்சியை எட்டியது.
நவீனகால இலக்கியங்கள்:
நவீன கால இலக்கியங்கள் என்பது பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து வரும்
இலக்கியங்கள் ஆகும். நவீன இலக்கியங்களுக்கு சில விருதுகளும் தரப்படுகின்றன.
அவை சிறந்த நவீனகால இலக்கியங்களாகவும் கருதப்படுகின்றன. 1965 ல் இருந்து
வழங்கப்படும் நெபுலா விருது, 1971 ல் இருந்து வழங்கப்படும் பிரிட்டிஷ்
பேண்டஸி விருது மற்றும் 1971 ல் இருந்து வழங்கப்படும் மைதோபோயிக் விருதுகள்
சிறந்த நவீனகால இலக்கியங்களுக்கு உண்டான விருதுகளாகக் கருதப்படுகின்றன.
_உதவி - விக்கிபீடியா _
No comments:
Post a Comment
Leave A Reply