வடக்கில் இராணுவக் குறைப்பு என்ற பேச்சுக்கு இனிமேல் இடமில்லை. அதை உறுதியாகவும் இறுதியாகவும் முன்னரே தெரிவித்துவிட்டோம். அண்மைக் காலங்களில் வடக்கில் இருந்து 70 மினி முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. அதற்கு மேலும் படைக்குறைப்பு என்ற விடயத்துக்கு இடமில்லை. சாதாரண பாதுகாப்புக்கு படைநிலைகள் அவசியம். இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசுவதற்குப் பொருத்தமான இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். எட்டப்படக்கூடிய எந்தத் தீர்வையும் சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது. ஆகவே அதனுடன் பேசி இணக்கம் காணுவதே பொருத்தமானது. தீர்வுக்கான பேச்சு நடத்துவதாயின் தமிழ்க்கூட்டமைப்பு அங்குதான் வர வேண்டும்.'' என்றும் கூறியுள்ளார். நேற்றுக் காலை தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களையும், நிர்வாகிகளையும் அலரிமாளிகையில் சந்தித்துப் பேசினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. அப்போது அவரிடம் ""புலிகளின் மீள்எழுச்சி என்பது வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினரை நிலை கொள்ளச் செய்வதற்கான கட்டுக்கதை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றதே?'' என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
""வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து இராணுவத்தை திரும்பப் பெற மாட்டோம். அதை உறுதியாகவும் இறுதியாகவும் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். ஏனைய பிரதேசங்களில் இராணுவத்தினர் எவ்வாறு நிலைகொண்டுள்ளனரோ, அவ்வாறே வடக்கு, கிழக்குப் பகுதிகளிலும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.''
""இராணுவத்தினரை அங்கு நிரந்தரமாக வைத்திருப்பது என்று தீர்க்கமாக எடுக்கப்பட்ட தீர்மானம். அது முடிவானது. அதை முன்னெடுப்பதற்கு "புலி எழுச்சி' என்ற கதைகளை அவிழ்த்து விடவேண்டிய தேவை எமக்கில்லை. நாம் 13 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கி விடுவித்துள்ளோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.''
""இவ்வாறுதான் ஆரம்ப காலங்களில் விடுதலைப் புலிகள் சுவரொட்டி ஒட்டுதல், ஆங்காங்கே சிறு வன்முறைகள் என்று ஆரம்பித்தனர். அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் அசிரத்தையாக இருந்தனர். அதனால் அது பூதாகரமாகி பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. இனிமேல் அவ்வறான நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்கமுடியாது.
நாம் அந்த விடயத்தில் அவதானமாகவும், சிரத்தையாகவும் உள்ளோம். இராணுவத்தினரை மீளப் பெற்று நாட்டை மீண்டும் ஒரு நெருக்கடிக்குள் தள்ள இடமளிக்கப் போவதில்லை'' என்று அங்கு திட்டவட்டமாகக் கூறினார் ஜனாதிபதி.
இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் நடத்தப்படும் என்று கூறப்படுகின்றமை தொடர்பாகவும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார்.
""சர்வதேச விசாரணைகள் நடத்தப்படலாம் என்று சிலர் கூறுகின்றனர். நாம் உள்நாட்டுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். காணாமற் போனோர் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவும் அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியே. காணாமற்போனவர்கள் என்று கூறப்படும் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். அது குறித்தெல்லாம் விசாரணைகள் நடத்த வேண்டியுள்ளது. முறையான விசாரணைகள் நடக்கும். உண்மைகள் கண்டறியப்படும். அதற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை. அது எமது இறைமையில் தலையிடும் செயல். அதற்கு நாம் ஒரு போதும் அனுமதிகப்போவதில்லை.'' என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, ""என்னிடம் பலர் கேட்கின்றனர், பொதுபலசேனா சட்டத்தைக் கையிலெடுத்துள்ளதா? என்று. அப்படி யாரும் சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது. மத விவகாரங்களை ஒட்டி எழுந்துள்ள நெருக்கடிகளைக் கையாள்வதற்கு விசேட பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கபடவுள்ளது.
அந்தப் பிரிவு இவ்வாறான பிரச்சினைகளைக் கையாண்டு, ஒழுங்கை நிலைநாட்டும். தற்போது எழுந்துள்ள மதரீதியான நெருக்கடிகள் குறித்து அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்துப் பேசவுள்ளேன்.'' என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply