20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையிடம் தோற்றதற்கு, யுவராஜ்சிங்கின் (21 பந்தில் 11 ரன்) மந்தமான பேட்டிங்கே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங்கை தொடர்ந்து, இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனும் யுவராஜ்சிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சீசனுக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கெவின் பீட்டர்சன் நேற்று டெல்லியில் கூறும் போது, ‘இங்கு நான் பத்திரிகைகளை படிக்கவில்லை. ‘டுவிட்டர்’ பக்கத்தில் யுவராஜ்சிங் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். இது தேவையற்ற
ஒன்று. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. கிரிக்கெட்டில் எப்போதும் சிறப்பாக விளையாடி கொண்டிருக்க முடியாது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் வெளியில் இருந்து விமர்சிப்பது மிக மிக எளிது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத வீரர்கள் கூட இவ்வாறு பேசிக் கொண்டிருப்பதை நான் பார்க்கிறேன்’ என்றார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரூ.12½ கோடிக்கு வாங்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த குயின்டான் டீ காக்கும் விக்கெட் கீப்பர்கள். இவர்களில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற குழப்பம் இப்போதே ஏற்படத் தொடங்கி விட்டது. ‘அணித் தேர்வு விஷயத்தில் இது போன்ற தர்ம சங்கடங்கள் உருவாவது நல்ல விஷயம் தான். இந்த குழப்பங்களை நான் உற்சாகமுடன் சமாளிப்பேன்.’ என்றும் பீட்டர்சன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply