கராச்சி,பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சாகித் அப்ரிடியும், உமர் அக்மலும் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
அப்ரிடிக்கு நோட்டீஸ்
வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக அரைஇறுதி வாய்ப்பை இழந்து சூப்பர்–10 சுற்றோடு நடையை கட்டியது.
அணி தாயகம் திரும்பிய போது விமான நிலையத்தில் பேட்டி அளித்த பாகிஸ்தான் ஆல்–ரவுண்டர் அப்ரிடி, ‘வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் ஆக்ரோஷமான மனநிலையுடன் ஆடியது போன்று தெரியவில்லை. இதனால் தான் போட்டியில் இருந்து வெளியேற நேரிட்டது. கேப்டன் பதவியை எனக்கு வழங்கினால், அந்த சவாலை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
ஒரு போட்டித் தொடரில் பங்கேற்று விட்டு நாடு திரும்பும் போது, அது தொடர்பாக கேப்டன் மற்றும் குறிப்பிட்ட அணி நிர்வாகிகள் மட்டுமே மீடியாக்களிடம் பேச வேண்டும். இந்த கட்டுப்பாட்டை மீறி நீங்கள் ஏன் மீடியாக்களிடம் பேசினீர்கள் என்று விளக்கம் கேட்டு அப்ரிடிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உமர் அக்மலுக்கும் பிரச்சினை
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் 23 வயதான உமர் அக்மலும் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப்ரவரி மாதம் லாகூரில் காரில் சென்ற போது, போக்குவரத்து விதிகளை மீறியதாக அவரை போக்குவரத்து அதிகாரிகள் மடக்கினர். அப்போது அவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட உமர் அக்மல் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டார். பிறகு மன்னிப்பு கேட்டதால் இந்த வழக்கில் இருந்து தப்பினார்.
இந்த நிலையில் அவர் அடுத்த பிரச்சினையில் மாட்டியுள்ளார். லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்திற்கு அவர் காரில் சென்றார். அப்போது அங்கு நின்ற பாதுகாவலர் அவரை மறித்தார். அவருக்கு. உமர் அக்மல் யார் என்று தெரியவில்லை. காரை உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது, வெளியே அதற்குரிய பகுதியில் நிறுத்துங்கள் என்றார். இதனால் எரிச்சல் அடைந்த உமர் அக்மல் அவருடன் கடும் வாக்குவாதம் செய்தார். தன்னை பற்றி எடுத்து கூறிய உமர் அக்மல், தனக்கு இந்த மாத இறுதியில் திருமணம் நடக்க இருப்பதாகவும், திருமண அழைப்பிதழ்கள் கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அதை அந்த பாதுகாவலர் பொருட்படுத்தவில்லை.
இதனால் கோபத்துடன், திருமண அழைப்பிதழ்களை கொடுக்காமலேயே உமர் அக்மல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பொதுவாக வீரர்களின் கார் லாகூர் ஸ்டேடியத்தின் உள்பகுதியில் நிறுத்த அனுமதிக்கப்படுவது உண்டு. இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply