சிட்னி,ஆஸ்திரேலியாவின் பிரபல நீச்சல் வீராங்கனை ஸ்டெபானி ரைஸ். இவர், 2008–ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் தனிநபர் மெட்லே, 400 மீட்டர் தனிநபர் மெட்லே, 4x200 மீட்டர் பிரீஸ்டைல் ஆகிய மூன்று பிரிவிலும் உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்று வியக்க வைத்தார். ஆனால் அதன் பிறகு தோள்பட்டை காயத்தில் சிக்கிய அவரால் 2012–ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. லண்டன் ஒலிம்பிக்குக்கு பிறகு சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். தோள்பட்டை காயத்துக்கு மூன்று முறை ஆபரேஷன் செய்த ரைசால், சர்வதேச போட்டியாளர்களுக்கு இணையாக மீண்டும் பழைய உத்வேகத்தை அடைய முடியவில்லை.
இந்த நிலையில் சர்வதேச நீச்சல் போட்டியில் ஓய்வு பெறுவதாக ஸ்டெபானி ரைஸ் நேற்று அறிவித்தார். தனது இணையதளத்தில் வீடியோ காட்சி மூலம் பேசிய அவர் ‘மீண்டும் நீச்சல் களத்திற்குள் ஒரு போதும் திரும்பமாட்டேன். இதுவே எனது இறுதி முடிவு. தொடர்ந்து நீச்சல் போட்டியில் பங்கேற்க முடியாமல் போவது வருத்தம் அளிக்கிறது’ என்றார்.
அடுத்த கட்ட திட்டம் குறித்து எதுவும் வெளிப்படையாக தெரிவிக்காத ஸ்டெபானி ரைஸ் நீச்சல் களத்திற்கு வெளியே தன்னை நிரூபித்து காட்டுவதே நோக்கம் என்றும் குறிப்பிட்டார். 25 வயதான ஸ்டெபானி ரைஸ் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2 வெள்ளியும், 5 வெண்கலமும் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply