வாக்களிக்காததையிட்டு நான் அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் மக்கள் வாக்களிக்காததன் மூலமாக கொழும்பு மாவட்ட தமிழ் கல்வி அபிவிருத்தி பாதிக்கப்பட்டுள்ளதை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.
மக்கள் புரிந்து கொண்டு திரும்பிப் பார்க்கும் பொழுது நான் அங்கிருக்க மாட்டேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சபைத் தேர்தல் தோல்வியின் பின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் இன்று (23) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பிரபா கணேசன் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த நான்கு வருடகாலத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் மூலமாக பாரிய நிதியினைப் பெற்று கொழும்பு மாவட்ட கல்விக்கான அபிவிருத்தியினை மேற்கொண்டிருந்தேன். அது மட்டுமின்றி என்னைத் தேடி வரும் சகல தரப்பினர்களுக்கும் பாகுபாடின்றி நிவாரணம் பெற்றுக் கொடுத்திருந்தேன்.
புதிய வீடமைப்பில் தமிழ் மக்களுக்கான சந்தர்ப்பத்தையும் பெற்றுக் கொடுத்து வருகின்றேன். இருப்பினும் மக்கள் மேல் மாகாணசபைக்கு ஒரு பிரதிநிதியை பெற்றுக் கொடுக்கக்கூடிய 5000 வாக்குகளை கூட வழங்கவில்லை. ஊடக அறிக்கைகளுக்கும் குரல் கொடுக்கின்றோம் என்ற மாயைக்கும் வாக்களித்திருக்கின்றார்கள். இதற்கு ஒரு சில ஊடகவியலாளர்களும் துணைபோயிருக்கின்றார்கள்.
ஊடகங்களின் நடுநிலை போக்கினை இவர்கள் தவறவிட்டதும் இன்றைய மேல்மாகாணசபையில் கல்வி அபிவிருத்திக்கான பிரதிநிதித்துவத்தை இல்லாதொழித்துள்ளது. இது வரலாற்று தவறாகும். இருப்பினும் கொழும்பு மாவட்ட தமிழ் கல்வி வளர்ச்சிக்கான எனது பணி தொடர்வதின் மூலமாகவே நான் மனம் திருப்தி அடைவேன்.
இவ்வருடத்திற்கு கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற முறையில் அரசாங்கம் எனக்கு ஒதுக்கியுள்ள முப்பது மில்லியன் ரூபாக்களும் கொழும்பு மாவட்ட தமிழ் கல்விக்கே ஒதுக்கப்படும். இன்று நான்காக இருந்த தமிழ் மாகாணசபை பிரதிநிதித்துவம் இரண்டாக குறைந்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் சுமார் 5000 வாக்குகள் குறைவினால் அங்கே அரச தரப்பில் போட்டியிட்ட ஆர். விஜயகுமார் வெற்றி பெறவில்லை. ஆனால் தனித்து போட்டியிட்டு 7000 தமிழ் வாக்குகளை வீனடித்து கம்பஹா மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு தனித்து போட்டியிடுவதை பரீட்சித்து பார்ப்பதற்காக தனித்து போட்டியிட்டு இரண்டு பிரதிநிதித்துவத்தை குறைத்துள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் மூலமாக 1988ம் ஆண்டு முதல் கிடைத்து வந்த பிரதிநிதித்துவத்தை இல்லாதொழித்துள்ளார்கள். தலைநகர் தலைமை கட்சி என்று சொல்பவர்களின் பிரதி தலைவர் குமரகுருபரன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். பிற கட்சி விவகாரங்கள் எனக்கு தேவையில்லாவிட்டாலும் கூட நல்லையா குமரகுருபரனை இக்கட்சிக்கு அழைத்துவர நானும் ஒரு காரணம் என்பதனால் இதை சொல்கின்றேன்.
கட்சி தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க 2002ம் ஆண்டு பல சுற்று பேச்சுவார்த்தைகள் குமரகுருபரனுடன் நடத்தியும் தன்னால் தமிழ் காங்கிரஸ் கட்சியை விட்டு வர முடியாதென தெரிவித்து பெரியவர் வேலணை வேணியனை அறிமுகப்படுத்தி எம்முடன் சேர்த்து வைத்தார். பின்பு 2004ம் ஆண்டு மறைந்த தி.மகேஸ்வரன் கொழும்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவுடன் வடக்கு மக்களின் வாக்குகளை எப்படியாவது பெறுவதற்காக நல்லையா குமரகுருபரனுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு எனக்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பின்பு நான் குமரகுருபரனுடன் வற்புறுத்தி பேசி அன்று நான் இருந்த எமது கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொடுத்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் மேல்மாகாணசபை தேர்தலில் என்னுடன் இணைந்து போட்டியிட வைத்தேன்.
ஆனால் இன்று இக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குமரகுருபரன் அநாதையாக இருந்ததாகவும் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் இக்கட்சியின் அறிக்கை விடுவதை பார்க்கும் பொழுது மன வேதனையாக இருக்கின்றது. வடக்கு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு இவர்கள் நடாத்தும் நாடகத்தினை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நான் ஒரு போதும் இனி எதிர்ப்பார்க்க போவதுமில்லை.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply