blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, April 23, 2014

பௌத்த தர்மத்தையும், மஹிந்த தர்மத்தையும் பார்த்து நாடே சிரிக்கிறது

தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பௌத்த தர்மம், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரக விஜித
தேரரை மஹியங்கனையில் ஓட ஓட துரத்தியதையும்  நாட்டை ஆளும் மஹிந்த தர்மம்,  பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை கண்காணிக்க  ஹம்பாந்தோட்டை விமான நிலையத்துக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை விரட்டியடித்ததையும் பார்த்து இந்த நாடே தலைகுனிகிறது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.  


தற்போதைய அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டது. அதனால்தான் இத்தனை  தடுமாற்றங்கள் நடைபெறுகின்றன.  இந்த இரு சம்பவங்களும் முடிவின் ஆரம்பத்தை அடையாளப்படுத்துகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின்  ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்ற போது சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது;

விஜித தேரர் ஒரு பௌத்த துறவி. இவர் மஹியங்கனை பிரதேச சபை  உறுப்பினர். பொதுபல சேனாவை இவர் கடுமையாக விமர்சிக்கிறார். அதனால் இவரை பொதுபல சேனா அழிக்க தேடி திரிகிறது.  கடந்த இரண்டு முறை இவருக்கு தனது பிரதேச சபை கூட்டத்தில் கலந்துகொள்ள  பொதுபல சேனா இடம் கொடுக்கவில்லை.

இந்தமுறையும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் அவரது பதவி பறிபோகும். இந்நிலையில் நேற்று முதல்நாள் அவர் பொலிஸாரின் பாதுகாப்புடன் பிரதேச சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கும் தேடிவந்து பொதுபல சேனா அவரை விரட்டியடித்தது. காட்டுக்குள்ளே பௌத்த தேரர் ஓடி ஒளிய வேண்டி இருந்தது.

பொலிஸார் விஜித தேரரின் கழுத்திலும், தோளிலும் கைபோட்டு பிடித்திழுத்து கொண்டு போவதை நாம் பார்த்தோம். தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பௌத்த தர்மம், இந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரக விஜித தேரரை  ஓட ஓட துரத்தி அடித்து பௌத்த தர்மத்தை பாதுகாப்பதை கண்டு நமக்கு சிரிப்பும், வேதனையும் தான் ஏற்படுகின்றன.

அதேபோல் ஹம்பந்தோட்டையில், 3,000 கோடி முதலீட்டில் கட்டப்பட்ட விமான நிலையத்தையும், 5,000 கோடி ரூபா முதலீட்டில் கட்டப்பட்ட துறைமுகத்தையும் கண்காணிக்க சென்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் விரட்டப்பட்டுள்ளனர்.

இந்த பணம் எவரதும் பரம்பரை சொத்து அல்ல. இது மக்கள் வரிப்பணம் அல்லது நாட்டை  அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் பணம். இந்த தாக்குதல் மூலம், இந்த நாட்டின் எந்த ஒரு அரசு நிறுவனத்தையும் கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் மார்ச் மாதம் ஹம்பந்தோட்டை மத்தல விமானநிலையம் நோக்கி சென்ற ஒரு விமானம், வானில் பறந்து வந்த மயில் ஒன்றில் மோதி விபத்து ஏற்படும் நிலைமை கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. அதேபோல் இந்த வருடம் ஜனவரி மாதமும் இன்னொரு மயில் மோதிய விபத்து  தவிர்க்கபட்டது. இதுபற்றியும்  இந்த நாட்டு மக்களுக்கு  மேலதிக விபரங்கள் தேவை.   இவை பற்றி அறிய ஹம்பந்தோட்டைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு விரட்டியடிக்கப்பட்டது.

இதுதான் இந்நாட்டில் இன்று மஹிந்த தர்மம். கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மாத்திரம் காட்டப்பட்ட மஹிந்த தர்மமும், பொதுபல தர்மமும், இப்போது சிங்கள மக்கள் மீது   தென்னிலங்கையிலும் முன்னெடுக்கப்படுகிறது. இது இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►