திலிப்–சாந்தினி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் ஒரு சந்தோசத் திருநாள். எல்லோரது வாழ்விலும் மறக்க முடியாத அனுபவங்களை சுமந்து கொண்டிருக்கும்.
அதனால்தான் வசதி படைத்த பலர் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவது மட்டுமல்லாமல் நடுக்கடலில்... நடுவானில்... என்று கற்பனையில் நினைத்துக்கூட பார்க்க முடியாத வகையில் புது புதுவிதமாய் நடத்துகிறார்கள்.
சாந்தினியின் அண்ணன் வினோத்துக்கும் அப்படி ஒரு ஆசை. தன் ஆசை தங்கை திருமணத்தை எல்லோரும் வியக்கும் வண்ணம் அதிசயமாய் நடத்த முடிவு செய்தார்.
அதற்காக சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தை அணுகி ராட்சத பலூனில் ஆகாய பந்தல் அமைத்து அதில் திருமணம் நடத்த நினைக்கும் தனது ஆசையை வெளியிட்டார்.
அந்த நிறுவனமும் அதற்காக பிரமாண்டமான ராட்சத பலூனை தயார் செய்தது.
திருமணத்துக்கு முந்தைய நாள் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்காக குதிரையில் மணப்பெண் சாந்தினியும், மணமகன் திலிப்பும் ஊர்வலமாக பூஞ்சேரியில் உள்ள மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ திரண்டு நின்றனர். மணமக்கள் கையில் மாலையை கொடுத்து பலூனின் கீழ் பாகத்தில் கட்டியிருந்த மணமேடை வடிவ பெட்டியில் அமர வைத்தனர்.
பலூன் நடுவானில் சென்றதும் இருவரும் மாலை மாற்றி கொள்ளும்படி அனுப்பி வைத்தனர். பலூன் உயரே உயரே பறந்து கொண்டிருந்தது. கீழே நின்றவர்கள் திறந்த விழி மூடாமல் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தார்கள்.
200 அடி உயரத்தில் பலூன் பறந்தபோது திடீரென்று பலூனையும், அதன் கீழ் தொங்கிய மணமேடையை சுற்றிலும் மின்விளக்குகள் எரிய விடப்பட்டது.
அந்தரத்தில் பறந்து கொண்டிருந்த ஆகாய பந்தலில் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சி பொங்க மாலை மாற்றிக்கொண்டனர்.
அதன்பிறகு மெல்ல மெல்ல அந்த பலூனை கீழே இறக்கினார்கள். அப்போதுதான் ஆகாயத்தில் இருந்து வண்ண விளக்குகள் மின்ன அலங்கார மேடை இறங்கி வருவதுபோல் இருந்தது.
ஆகாயத்தில் மாலை மாற்றியது பற்றி மணமக்கள் கூறும்போது, இது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இன்ப அதிர்ச்சி. சொர்க்க லோகத்தில் எங்கள் திருமணத்தை நடத்தியது போல் பிரமிப்பில் இருக்கிறோம்’’ என்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply