இப்போட்டி குறித்து கருத்து தெரிவித்த இந்திய சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் 'அரை இறுதி ஆட்டம் என்று வந்துவிட்டால் அது யாருடைய போட்டியாகவும் அமையலாம். இருபது20 போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம். எனினும் எங்களுக்குத்தான் அனுகூலம் அதிகம் என்று நான் கூறமாட்டேன்' எனக் கூறினார்.
இன்றைய போட்டிக்கு முன்னோடியாக மிர்பூர் அரங்க ஊடக மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 3 சுழல்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த திட்டம் உள்ளதா எனவும் தாங்கள் ஆரம்பப் பந்து வீச்சாளராகவா அல்லது இடைநிலை பந்துவீச்சாளராகவா செயற்படுவீர்கள் எனவும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், 'அது எனது கைகளில் இல்லை. அணித் தலைவரும் தெரிவுக் குழுவினரும்தான் அதனை தீர்மானிப்பர். என்னைப் பொறுத்தளவில் ஆரம்பப் பந்துவீச்சாளராக செயற்படுமாறு அணித் தலைவர் என்னை அழைத்தால் அது எவ்வித மாற்றத்தையும் என்னில் ஏற்படுத்தாது. என்னை எந்த நேரத்தில் பந்து வீச அழைத்தாலும்
அதனை நிறைவேற்றுவதே எனது கடமை' என்றார்.
இந்த அரை இறுதியில் இந்தியாவுக்கு அழுத்தங்கள் ஏற்படுமா? எனக் கேட்டபோது, 'நிச்சயமாக இல்லை. எமது அணி மிக முக்கிய போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. எனவே எங்களுக்கு அழுத்தமோ, அச்சமோ இல்லை' என பதிலளித்தார்.
'ஓர் அணி 12 மாதங்களும் உயரிய நிலையில் இருக்க முடியாது. போட்டிகளில் மேடு பள்ளங்கள் சகஜம். எனவே அரை இறுதியில் விளையாடும் எந்த அணியும் வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கும் என்பது மாத்திரம் நிச்சயம். இரண்டு அணிகளிலும் சுழல்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றார்கள். அது ஒரு சிறு வித்தியாசத்தைத் தான் ஏற்படுத்தும்' எனவும் அஷ்வின் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
Leave A Reply