blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, November 5, 2014

கூட்டமைப்பு முன் வந்தால் உலமா கட்சி அவர்களுடன் இணைந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக செயற்பட தயார்!

தமிழ், முஸ்லிம் உறவை மீண்டும் ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து செயற்பட வேண்டிய இத்தருணத்தில் தேசியப் பட்டியல் மற்றும் பெருந்தொகை பணம் பெற்று தமிழ்க் கூட்டமைப்புடன் உலமா கட்சி இணைந்து செயற்படவுள்ளதாக இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி அப்பட்டமான பொய்யாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழ், முஸ்லிம் ஒற்றுமைக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட நினைக்கும் உலமா கட்சி பற்றிய பொய்களை அவிழ்த்து விடுவதில் சில வங்குரோத்து அரசியல்வாதிகள் இன்பம் காண்கிறார்கள்.

இன்றிருக்கும் சூழ்நிலையில் சிங்கள பேரினவாதத்திலிருந்து தென் மாகாண முஸ்லிம்களை பாதுகாப்பதாயின் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஜனநாயக ரீதியாக ஒப்பந்த அரசியலூடாக கிழக்கில் ஒன்று பட வேண்டும் என்பதில் உலமா கட்சியிடம் மாற்றுக்கருத்து இல்லை.
 
யுத்த காலத்தில் முஸ்லிம்கள் தமிழ் ஆயுத போராளிகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய சமாதான காலத்தில் கூட சிங்கள பேரினவாதத்தினால் பள்ளிவாயல்களை இழந்துள்ளதோடு பேருவளையில் பாரிய இனஒழிப்புக்கும் முகம் கொடுத்தது.

நாம் நம்பியோரை நமது கழுத்தை அறுத்து விட்ட நிலையில் தமிழர்களும், முஸ்லிம்களும் பழையனவற்றை மறந்து ஒற்றுமைப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது.

அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த உலமா கட்சி முயன்று வருகிறது.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வந்தால் உலமா கட்சி அவர்களுடன் இணைந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக செயற்பட தயாராகவே உள்ளது.

அதே போல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்வது போன்ற ஒரு காலை அரசாங்கத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு காலை தமிழ் கூட்டமைப்புடன் வைத்துக் கொள்ளும் பச்சோந்தி, ஏமாற்று அரசியல் உலமா கட்சியிடம் ஒரு போதும் இல்லை.

அந்த வகையில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக உலமா கட்சியும் தமிழ் கூட்டமைப்பும் இணைந்து எதிர் காலத்தில் பேச்சுவார்த்தையில் ஈடு படுவது என்பதில் த. கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் உலமா கட்சியின் தலைமையும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது. ஆனாலும் அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில் உலமா கட்சியின் அரசியல் முன்னேற்றத்தை பொறுக்க முடியாதோர் அக்கட்சி பற்றிய பொய்களை அவிழ்த்து விடுவதை வண்மையாக கண்டிக்கிறோம்.

அதே வேளை உலமா கட்சி த. கூட்டமைப்புடன் இணைய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அக்கட்சியின் தேசிய பட்டியலை பெற வேண்டிய நிலையும் ஏற்பட்டால் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் செய்தது போன்ற நம்பிக்கை துரோகத்தை உலமா கட்சி ஒரு போதும் செய்யாது என்பதை உறுதியாக கூறுகிறோம். மு. காவின் இத்தகைய துரோகங்களால் முஸ்லிம்கள் நம்பிக்கையற்றவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு முழு முஸ்லிம் சமூகமும் தலை குணிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலமா கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை அக்கட்சி தனது அத்தனை அரசியல் வழிகாட்டலையும் இஸ்லாமிய வழி காட்டலுக்குள் நின்றே செய்து வருகிறது.

அந்த வகையில் உண்மை நேர்மை வாய்மை என்ற இஸ்லாமிய அரசியல் கோட்பாட்டுக்குள் நின்றவாறே த. கூட்டமைப்புடன் உலமா கட்சி பேசுமே தவிர முஸ்லிம் சமூகத்துக்கு பாதகமான எந்த விடயத்தையும் ஏற்றுக்கொள்ளாது.

அத்துடன் தனிப்பட்ட நலனை விடுத்து முஸ்லிம் தமிழ் சமூகங்களின் நலனுக்கே முக்கியத்துவமளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே புலம் பெயர் தமிழ் மக்களிடமிருந்து பணம் பெற்றதாகவும் த. கூட்டமைப்புடன் தேசிய பட்டியல் மற்றும் பணம் என்பவற்றில் உலமா கட்சித்தலைவர் உடன்பாடு கண்டுள்ளதாகவும் வெளிவந்த செய்திகள் வெறும் ஊகமும் பொய்யுமாகும் என தெரிவிப்பதுடன் இவ்வாறான பொய்யான சலசலப்புக்களுக்கு உலமா கட்சி அஞ்சாது என்பதையும் சொல்லி வைக்கிறோம்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►