நிலச்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகள் சிலவற்றை தேசிய கட்டடங்கள் தொடர்பான ஆராய்ச்சி அமைப்பு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் உயர் - தாழ் பிரதேசங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடும் மழை பெய்தால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பிரதேசங்களையே அது அடையாளப்படுத்தியிருப்பதாக அந்த அமைப்பின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார நேற்று கூறினார்.
இவ்வாறு நிலச்சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்கள் பதுளை, நுவரேலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, மாத்தளை கோகலை மாவட்டங்களிலேயே உள்ளன என்றும் அவர் கூறினார்.
அத்துடன் இந்த அபாய நிலை குறித்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கும் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்றும் எனவே உடனடியாக அப்பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே பதுளையில் மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என புவியியலாளர் கெலும் செனவிரத்ன எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இந்த நிலச்சரிவும் ஹல்தமுல்ல, கொஸ்லந்த பகுதிகளிலேயே ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே அபாய பிரதேசங்களில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்குமாறு அவரும் தெரிவித்தார்.
இதேசமயம் நிலச்சரிவு அபாயம் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு நான்கு அணிகள் நியமிக்கப்பட்டுள்ளன என்றும் இதில் ஒரு அணியில் இருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
Leave A Reply