கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலின் வடக்குப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற வாகனத் தரிப்பிட நிர்மாணப் பணிகளுக்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு விதித்துள்ளது.கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முஹைதீன் நேற்று இத்தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சட்டத்தரணி யூ.எம்.நிசார் ஊடாக கல்முனைக்குடியைச் சேர்ந்த ஏ.சி.ஏ.சத்தார், எம்.எம்.ஆர்.பரீட், எம்.எல்.எம்.ஜௌபர் ஆகியோர் மேற்படி நிர்மாணப் பணிகளை தடை செய்யக் கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதான பொறுப்பதிகாரி டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனைக்குடி-09 கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.சம்சுதீன், செயலாளர் எம்.ஏ.லத்தீப் ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான வடக்குப் பகுதியில் பொருத்தமற்ற இடத்தில் வாகனத் தரிப்பிடம் அமைக்கப்படுவதாகவும் அதனால் பள்ளிவாசலைச் சேர்ந்த பொது மக்களுக்கு இடையூறும் பாதிப்பும் இழப்புகளும் ஏற்படுவதுடன்
பள்ளிவாசலின் மகிமைத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வழக்காளிகள் குறிப்பிட்டுள்ளதுடன் இந்த சட்டவிரோத நிர்மாணத்தை தடை செய்யுமாறும் அவர்கள் நீதிமன்றை கோரியுள்ளனர்.
இதனைப் பரிசீலித்த நீதிபதி குறித்த நிர்மாணப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறும் இத்தடை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெறும் என்றும் எதிராளிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதிபதி அறிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply